அரசுத் துறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கு, "தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள்" என்ற ஓர் அமைப்பு நிறுவப்படும் என முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா: "தமிழ்நாட்டில் புத்தாக்க பண்பாட்டை வளர்ப்பதற்காக, அரசுத் துறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கு, மாநில திட்டக் குழுவில் "தமிழ் நாடு புத்தாக்க முயற்சிகள்" அதாவது Tamilnadu Innovative Initiative என்ற ஓர் அமைப்பு நிறுவப்படும்.
முதற்கட்டமாக, இந்த அமைப்பு அரசுத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் புத்தாக்கத்தை வளர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இது படிப்படியாக அரசுத் துறை அல்லாத நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்படும். புத்தாக்க முயற்சிகளுக்கு பரிசுகள் வழங்கும் திட்டமும் உருவாக்கப்படும்.
இதற்கென "மாநில புத்தாக்க நிதியம்" என்ற ஒரு நிதியம் ஏற்படுத்தப்படும். புத்தாக்க முயற்சிகளை உள்ளடக்கிய திட்டங்களுக்கு இந்த நிதியத்திலிருந்து நிதி வழங்கப்படும். இந்த நிதியத்திற்கு ஆண்டுதோறும் 150 கோடி ரூபாய் வழங்கப்படும். சிறந்த புத்தாக்க முயற்சிகளுக்கு "மாண்புமிகு முதலமைச்சரின் புத்தாக்க விருது" என்ற பெயரில் விருதுகளும் வழங்கப்படும்.
சிறந்த ஆளுமை என்பது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றின் குறிக்கோள்களை எய்தியுள்ளனவா என ஆராய்ந்து, அதன் அடிப்படையில் கொள்கைகளை வகுப்பது ஆகும். எனவே, நடைமுறையில் உள்ள திட்டங்களை கண்காணிப்பதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் ஏதுவாக, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை மேலும் வலுப்படுத்தப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களில் இடைக்கால திருத்தங்களை மேற்கொள்ளவும், வருங்காலத்தில் சிறப்பான மற்றும் அதிக பயன் அளிக்கக் கூடிய திட்டங்களை உருவாக்கவும் இது உதவிகரமாக இருக்கும்.
இதற்காக, அமெரிக்காவிலுள்ள, உலக அளவில் மிகச்சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையமான மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் Massa chusetts Institute of Techology- MIT-யில் செயல்படும் ஜமீல் - வறுமை குறித்த செயல் ஆராய்ச்சி ஆய்வகம் – Poverty Action Lab – அமைப்புடன் இந்த அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும்.
பள்ளிக் கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் சத்துணவு ஆகிய முக்கியத் துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை மதிப்பீடு மற்றும் திறன் மேம்பாடு செய்ய உலக அளவில் புகழ்பெற்ற சிறந்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக, நடப்பு நிதியாண்டில் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒருங்கிணைந்த பண்ணை முறை, வேளாண்மையையும், அதனைச் சார்ந்த தொழில்களையும் ஒன்றிணைத்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வகை செய்கிறது. மேலும் இது வேளாண்மையின் உப பொருட்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும், ஒரு தொழிலின் கழிவுப் பொருட்களை அடுத்த தொழிலுக்கு இடுபொருளாக பயன்படுத்தி உற்பத்தியையும் லாபத்தையும் அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது.
எனவே, பெரம்பலுhர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் வட்டாரம், நாமக்கல் மாவட்டத்திலுள்ள மல்ல சமுத்திரம் வட்டாரம், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு, கோவில்பட்டி; ஒட்டப்பிடாரம், புதூர் மற்றும் உடன்குடி வட்டாரங்கள், மதுரை மாவட்டத்தில் கள்ளிகுடி வட்டாரம், தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு வட்டாரங்கள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி மற்றும் கோட்டூர் வட்டாரங்களைச் சேர்ந்த மிக ஏழ்மை நிலைமையில் உள்ள 750 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 8 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பண்ணை முறையை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பண்ணை குட்டைகள் அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல், சாண எரிவாயு உற்பத்தி ஆகியவற்றுக்காக மானிய உதவி அளிக்கப்படும். மேலும், ஒருங்கிணைந்த பண்ணை முறையை பின்பற்றத் தேவையான பயிற்சியும் இத்திட்டத்தின் மூலம் அளிக்கப்படும்.
அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மூலம், நடைமுறையில் உள்ள திட்டங்கள் மேம்பாடு அடையவும், விவசாயிகளின் வருமானம் பெருகவும் வழிவகுக்கும்" இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
No comments:
Post a Comment