மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் விளக்குகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா?
அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி காலி பணியிடங்களில் பார்வையற்றோருக்கும், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி, செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி ஆகியோருக்கும் தலா ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது
கல்வி நிறுவனங்களில் உள்ள பணியிடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா?
கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை மொத்த பணியிடங்களில் 2 சதவீதம் செவித் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசு மற்றும் அரசு சார்ந்த கல்வி நிறுவனத்தில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதுபோல, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியப் பணியிடங்களில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா?
கல்வி நிறுவனங்களிலும் பார்வையற்ற, கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் படிக்க மொத்தம் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
நன்கு படிக்கும் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கு பரிசு ஏதேனும் வழங்கப்படுகிறதா?
10-ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி பிளஸ்2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.6 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.4 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2,500, மூன்றாம் பரிசாக ரூ.1,500 வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.4 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.1,500, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment