Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 4 August 2014

"52 சதவீத மாணவர்கள் பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்துகின்றனர்'

இந்தியா முழுவதும் 52 சதவீத மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிடுவதாக தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகத்தின் பேராசிரியை விமலா ராமச்சந்திரன் கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருவில்லா ஜேக்கப் நினைவுச் சொற்பொழிவில் பள்ளிகளில் உள்ள கற்றல் பிரச்னைகள் தொடர்பாக அவர் நிகழ்த்திய உரை:
நமது நாட்டில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே எழுதுதல், படித்தல், பேசுதல், புரிந்துகொள்ளுதல் உள்ளிட்ட அனைத்துவகைத் திறன்களைப் பெற்றுள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இத்திறன்கள் இல்லை. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என இருக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் இதைப் பின்பற்றுவதில்லை.

வாசித்தல், எழுதுதல், புரிந்துகொள்ளுதல் போன்ற அடிப்படைத் திறனை மேம்படுத்துவதுக்கு பள்ளிகள் போதுமான நேரத்தை ஒதுக்குவதில்லை.
இதில் குறைபாடுள்ள மாணவர்கள் 8, 9-ஆம் வகுப்புகளுக்குச் செல்லும்போது, அந்தக் குறைபாடுகள் படிப்பையே நிறுத்தும் நிலைக்குத் தள்ளுகிறது. இந்தியாவில் ஒன்றாம் வகுப்புகளில் சேரும் 100 மாணவர்களில் 48 மாணவர்கள் மட்டுமே 9-ஆம் வகுப்புகளுக்குச் செல்கின்றனர். 52 சதவீத மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிடுகின்றனர்.
ஒவ்வொரு ஆசிரியரும் குறிப்பிட்ட காலத்துக்குள் எவ்வளவு பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்று கால அட்டவணை தரப்படுகிறது. இந்த முறையில் எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன என பார்க்கப்படுகிறதே தவிர, மாணவர்கள் எவ்வளவு கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதில்லை. மாணவர்கள் என்ன கற்றுக்கொண்டனர் என்பதை அறிவதற்கு ஒரு வழிமுறை வேண்டும்.
நமது நாட்டைப் போலவே ஏராளமான பிரச்னைகளுடன் இருந்த போலந்து நாட்டில் 1999-2006-ஆம் ஆண்டுகளில் கல்வித் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அந்த நாட்டில் பள்ளிகளுக்கு தன்னாட்சியும், ஆசிரியர்களுக்குச் சுதந்திரமும் வழங்கப்பட்டது. பாடத்திட்டத்தை மட்டும் அரசு முடிவு செய்தது.
சுதந்திரம் வழங்கியதால், ஒவ்வொரு ஆசிரியரும் கற்பனைத் திறனை முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றுத் தந்தனர். இப்போது கல்வியில் அந்த நாட்டில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டில் கல்வித் துறையில் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிப்பதற்குப் பதிலாக, பள்ளி அளவில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். பள்ளிகள் தன்னிச்சையாகவும், குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தோடும் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
குருவில்லா ஜேக்கப் நினைவு கல்வி அறக்கட்டளையின் அமைப்பாளர்களான எஸ்.விஜி, பத்திரிகையாளர் என்.முரளி, கே.எம். மேம்மன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

No comments: