மாணவர்கள் நலன்கருதி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பருவமுறைத் தேர்வு (செமஸ்டர்) அறிமுகப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாநாடு, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் வை. பாலமுருகன், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க இணைச் செயலர் எஸ். சுப்பையா, சிஐடியூ இணை பொதுச் செயலர் ஆர். கருமலையான் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
மாநாட்டில், மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், ஆய்வக உதவியாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பருவமுறைத் தேர்வு (செமஸ்டர்) அறிமுகப்படுத்த வேண்டும். 1.4.2003 முதல் அமலில் உள்ள தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, முன்பிருந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 6ஆவது ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைய வேண்டும். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தடைவிதிக்கும் அரசாணை 720-ஐ ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில், மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் வை. பாலமுருகன் பேசியது: பிளஸ் 2 தேர்வில் அரசுப் பள்ளிகள் 90 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதற்கு, ஆசிரியர்களின் முயற்சியே காரணம். ஆனால், கல்வி என்பது தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல. மாணவர்கள் எதிர்கால சமுதாயத்தை எதிர்கொள்ளும் திறமையை அளிப்பதாகவும் இருக்கவேண்டும். நாட்டின் மனிதவளம் உருவாகும் இடம் பள்ளிகள். எனவே, மாணவர்கள் இயல்பான மனநிலையுடன் கல்வி கற்கும் சூழலை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, தனியார் கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 தேர்வுக்காக மட்டுமே மாணவர்களை தயார்படுத்துவதால், பிளஸ் 1 வகுப்பில் உள்ள அடிப்படை பாடங்களை தவிர்த்து விடுகின்றனர். இதனால், உயர்கல்வி பயிலும்போது, மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கல்லூரிகளில் உள்ளதுபோல் செமஸ்டர் தேர்வு முறை இருந்தால், அனைத்து பாடங்களையும் கற்றுக்கொள்ளும் சூழல் ஏற்படும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாநாட்டில், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் ஜி. சுப்பையா தலைமை வகித்தார். பொதுச் செயலர் ஆர். விஜயகுமார், பொருளாளர் சி. வள்ளிவேலு உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். இதில், தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மாநாட்டில், முன்னாள் மாநிலத் தலைவர் ஆர். சம்பத் படம் திறக்கப்பட்டது. முன்னாள் மாநில நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.
மாநாட்டின் நிறைவாக, கே.கே. நகரில் உள்ள பெரியார் வரவேற்பு வளைவில் இருந்து அண்ணா பேருந்து நிலையம் வரையில் பேரணி நடைபெற்றது. பேரணியில், மூட்டா சங்க மாநிலப் பொதுச் செயலர் எஸ். சுப்பாராஜூ, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் டி. கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment