ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில், 100-க்கு ஏழு குழந்தைகள்தான் தமிழகத்தின் பள்ளிகளின் வாசல்படியில் கால்வைத்தன. அரசுப் பள்ளிகளில் அனைவரும் சமமாகக் கல்வி பயிலலாம் என்ற அரசின் ஆணை ஏட்டளவில்தான் அப்போது இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1939-லேயே ராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சராகிவிட்டார். அப்போது மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் தலித் சமூகத்தின் பெண் குழந்தைகளைப் பள்ளியில் மூன்று மணிநேரம் மட்டுமே அனுமதித்தால் போதும். மற்ற நேரம் அவர்களின் அம்மா, அப்பாவின் வேலைகளில் உதவிசெய்யட்டும் என்று ஆணையிட்டார்.
1950-ல் இந்தியா குடியரசானது. அனைவருக்கும் கல்வி தர வேண்டியது அரசின் கடமை என்று சொன்னது, சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம். சென்னை மாகாணத்தில் 1951-ல் 80% பேர் கைநாட்டுகள்தான். 1946-ல் முதல் வகுப்பில் சேர்ந்த 12 லட்சத்து 22 ஆயிரத்து 775 குழந்தைகள் 5-ம் வகுப்பு வருவதற்குள் 100-க்கு 63 பேர் பாதியிலே நின்றுவிட்டார்கள்.
இந்தச் சூழலில், சென்னை மாகாணத்தின் கல்வித் துறை 1950-ல் பத்தாண்டுத் திட்டமொன்றை உருவாக் கியது. அதில், ஆண்டுக்கு ஒரு கோடி செலவழித்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐந்து லட்சம் புதிய மாணவர் களைப் பள்ளியில் சேர்க்கலாம் என்றது. ஆனால், நடைமுறையில் 1950-51-ல் கல்விக்காக சென்னை மாகாணத்தில் 5 லட்சம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது.
அப்போதைய தமிழகத்தில் எல்லாக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கத் தேவையான அளவு பள்ளிகள் கிடையாது. தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர் களும் கிடையாது.
அந்த நேரத்தில்தான் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி மீண்டும் வந்தார். 1953-ல், மேம்படுத்தப்பட்ட ஆரம்பக் கல்வித் திட்டத்தை அவர் அறிவித்தார்.
காமராஜரை முதல்வராக்கிய குலக்கல்வித் திட்டம்
அப்போதைய பள்ளிகள் ஐந்து மணி நேரம் இயங்கின. அதை மாற்றி, மூன்று மணி நேரம் பள்ளியில் இருக்க வேண்டும். மூன்று மணி நேரம் தங்களின் குடும்பத் தொழிலை மாணவர்கள் கற்க வேண்டும் என்று ராஜாஜி மாற்றினார். மாணவிகள் வீட்டுவேலைகளைக் கற்க வேண்டும் என்றார். குடும்பத் தொழில் செய்யும் பெற்றோர் இல்லாத மாணவர்கள் வேறொரு தொழில் செய்பவரிடம் வேலையைக் கற்கலாம். இது தவிர, மாணவர்கள் தமது ஊர்களில் துப்புரவுப் பணி, சாலைகள் அமைத்தல், கட்டிடம் கட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுவார்கள். இரண்டு பணி நேரங்களில் தினமும் பள்ளிகள் இயங்கும் என்றார் ராஜாஜி.
தானாகவே எரிந்துகொண்டிருந்த தமிழகத்தின் மேல் இந்தக் கல்வித் திட்டம் மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டது. இதை, குலக்கல்வித் திட்டம் என்றார் பெரியார். மக்களின் எதிர்ப்பு விஸ்வரூபம் எடுத்து, பல கட்சிகளை ஒன்றுபடுத்தியது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காமராஜர் தலைமையில் எதிர்ப்பு வெளிப்பட்டது. ராஜாஜி வெளியேறினார். காமராஜர் 1954-ல் முதல்வர் ஆனார். ஆக, குலக்கல்வித் திட்டம் வராமல் இருந்திருந்தால் காமராஜர் முதல்வராகும் வாய்ப்பு குறைவுதான்.
கல்விக்கு உணவு தந்தவர்
இந்த நேரத்தில்தான் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் தனியாகப் பிரிந்தது. அதுவும் குலக்கல்வியைக் கைவிட்டது. அதன் பிறகு இன்றைய தமிழகத்தின் பகுதிகளில் மூடப்பட்ட பள்ளிகளையெல்லாம் காமராஜர் திறந்தார். ஆயிரக் கணக்கில் புதிய பள்ளிகளைக் கட்டினார். ஒவ்வொரு கிராமத்துக்கும் அருகில் ஒரு பள்ளி இருக்குமாறு செய்தார். இலவசக் கட்டாயக் கல்வியைத் தமிழகத்தில் உருவாக்கி வலுப்படுத்தினார்.
1925-ல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக சிங்காரவேலர் இருந்தபோது, மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்க வைத்தார். அந்த மதிய உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் காமராஜர் அறிமுகப்படுத்தினார். இது உலக அளவில் இன்னமும் பேசப்படுகிற புதிய முயற்சி. இத னால் பள்ளிகளில் குழந்தைகள் சேர்வதும், இடையிலேயே நின்றுபோகாமல் தொடர்ந்து வருவதும் அதிகரித்தது. லட்சக் கணக்கான குடும்பங்களில் கல்வி முதன்முறையாக நுழைந்தது. தமிழகத்தைப் பின்பற்றித்தான் பல மாநிலங்கள் மதிய உணவுத் திட்டத்தில் இறங்கின.
அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் கடவுள்
“தனது மகன் தன்னைப் போலவே வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக ஒரு அப்பாவுக்கு இருக்கும். ஆனால், பெற்றோரின் தொழிலை மட்டும் தான் பிள்ளைகள் செய்ய வேண்டுமென்றும் வேறு பிள்ளைகள் அந்தத் தொழிலுக்கு வரமுடியாது என்றும் கட்டாயமாக உருவாக்கப்படும் சூழலில் நீதியும் சமத்துவமும் இருக்காது” என்கிறார் எனது நண்பர் ஒருவர். செங்கல்பட்டில் ஒரு பண்ணையில் பரம்பரையாக விவசாய வேலைகளைச் செய்த அப்பா ஒருவர், தான் வேலை செய்யும் இடத்துக்குத் தனது மகன்கள் வந்தால் அடித்து விரட்டுவாராம். ஆண்டை யின் கண்ணில் படாமல் தனது மகன்களை காமராஜர் உருவாக்கிய அரசுப் பள்ளியில் அவர் படிக்க வைத்தார். அந்த முதல் தலைமுறை பட்டதாரிகள் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தில் தற்போது ஊழியர்களாக இருக்கிறார்கள். தன்னைப் போலத் தனது பிள்ளைகள் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத் தங்கள் அப்பா பட்ட கஷ்டங்களை நினைத்து அவர்கள் இப்போதும் கண்கலங்குகிறார்கள்.
குலக்கல்வி கிளப்பிய விவாதம் முடிந்துவிடவில்லை. கட்டாயக் கல்வியுரிமைச் சட்டம், சமச்சீர் கல்வியை அமலாக்குவதற்கான விவாதங்கள், வாழ்க்கைக்கு நெருக்கமான கல்வி ஆகிய இன்றைய விவாதங்களின் வேர் குலக்கல்வித் திட்டத்திலும் இருக்கிறது.
கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துப் பாடுவதை நிறுத்திவிட்டு, காமராஜர் வாழ்த்து பாடலாம் என பெரியார் பாராட்டினார். இன்னமும் மக்கள் மனதில் அந்தப் பாராட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment