Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 29 May 2014

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பு: ஜூன் 2 முதல் விண்ணப்பம் விநியோகம்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விணணப்பப் படிவங்கள் ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி ஜூன் 30-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30 தேதி கடைசி நாள் ஆகும்.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு (கவுன்சிலிங்) கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

கலந்தாய்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு தகுதியுள்ளவர்களுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்கக அலுவலகம், கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் காமராஜர் சாலையில் அமைந்துள்ள மாநிலக் கல்லூரி உள்பட மாநிலம் முழுவதும் 43 மையங்களில் ஜூன் 2 தேதி முதல் 30-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 300 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் ரூ. 150 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கட்டணத்தை "செயலர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கை 2014' என்ற பெயரில் கோவையில் காசாக்கும் வகையில் வரைவோலையாக எடுத்து சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை "செயலர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கை 2014, அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை - 641 013' என்ற முகவரிக்கு ஜூன் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: