பள்ளிப் பாடத்திட்டத்தில், கூடுதல் நிதி கருத்தாக்கங்களை சேர்ப்பது குறித்தான முயற்சிகளை, பங்கு சந்தை அமைப்பான செபி (Securities and Exchange Board of India - SEBI) எடுத்துள்ளது.
இதுகுறித்து CBSE மற்றும் மத்திய மனிதவள அமைச்சகத்திடம் பேசியுள்ளதாக செபி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து மேலும் கூறப்படுவதாவது: பள்ளிப் பாடத்திட்டத்தில் கூடுதல் நிதி கருத்தாக்கங்களை சேர்ப்பது குறித்து மேற்கண்ட அமைப்புகளிடம் பேசப்பட்டுள்ளதை அடுத்து, இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 - 2015ம் ஆண்டு காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் பாடத்திட்ட மாற்ற நடவடிக்கையின்போது, இந்த கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் நிதித்துறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு முதலே, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு, செபி, அழைப்பு விடுத்து வருகிறது. இதுவரை 139 வருகைகள் நிகழ்ந்துள்ளன.
அமிர்தசரஸ், புதுச்சேரி, கோவா, பெரெய்லி போன்ற நாட்டின் பல்வகைப்பட்ட இடங்களிலிருந்து மேலாண்மை, வணிகம், வங்கியியல், சட்டம், கலை மற்றும் அறிவியல் ஆகிய வெவ்வேறான படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் இந்த வருகைகளில் பங்கேற்றுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment