Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 1 April 2014

HSC: தேர்வு முடிவு வெளியிடுவதற்கு தேர்தல் தடையாக இருக்காது

"பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, தேர்தல் தடையாக இருக்காது. தேர்வு முடிவுகள் கிடைத்ததும், அதனை வெளியிடுவோம்" என தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்தது.
பிளஸ் 2 மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி, நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இதர விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. தமிழகத்தில், ஏப்., 24ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதன் முடிவு, மே 16ல் வருகிறது. ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளிவரும் வரை தேர்தல் நன்னடத்தை விதிகள், அமலில் இருக்கின்றன.

இதனால், அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணிகளும், தேர்தல் விதிமீறல்களில் வந்துவிடுமா என பலமுறை விசாரித்த பிறகே, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவு ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ வந்துவிடும். அதேபோல், 10ம் வகுப்பு தேர்வு முடிவும் மே 16ம் தேதிக்குள் வெளிவர வாய்ப்பு உள்ளது.
இந்த இரு தேர்வு முடிவுகளும் தேர்தல் காரணமாக, தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா என தேர்வுத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:
பள்ளி பொதுத் தேர்வு முடிவை வெளியிடுவதில், தேர்தல் விதிமீறல் இருக்காது. ஒவ்வொரு ஆண்டும் மே முதல் வாரத்தில் தான், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகிறது. சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி, லோக்சபா தேர்தலாக இருந்தாலும் சரி பெரும்பாலும், ஏப்ரல், மே மாதங்களில் தான் நடக்கின்றன. ஆனாலும், இதற்கு முன் குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அரசு துறைகளில் புதிய பணி நியமனங்கள் தான் நடக்கக் கூடாது. மற்றபடி, தேர்வு முடிவை வெளியிட தடை இல்லை. இதற்கு எல்லாம் தடை என்றால் மே இறுதியில் தான், தேர்வு முடிவை வெளியிட முடியும். பின் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு உட்பட உயர்கல்வி சேர்க்கை பணிகள் முழுவதும், ஸ்தம்பித்து விடும். எனவே, பணிகள் முடிந்ததும் பொது தேர்வு முடிவை வெளியிடுவோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments: