Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 25 April 2014

தமிழ் தேர்வில் "பருவம்' தவறி கேள்விகள் : பள்ளி குழந்தைகள் தவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில், மூன்றாம் பருவ தமிழ் தேர்வில் முதல், இரண்டாம் பருவ புத்தகங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்களின் நலன் கருதி புத்தக சுமையை குறைக்கும் வகையில், முப்பருவ கல்வி முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அந்தந்த பருவ தேர்வு முடிந்ததும், அப்பாடங்களை மீண்டும் படிக்க வேண்டியதில்லை.
இந்நிலையில் ராமநாதபுரம் தொடக்க கல்வித்துறை தயாரித்த மூன்றாம் பருவ தேர்வில் முதல் மற்றும், இரண்டாம் பருவ பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டன. 6, 7, 8ம் வகுப்பு தமிழ் தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறியதாவது: இம் மாவட்டத்தில் மட்டும், பழைய முறையில் தேர்வுகள் நடத்துவது அரசின் உத்தரவை மீறிய செயல். இதனால் மூன்றாம் பருவத்தேர்வில், மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறுவர். இதர மாவட்டங்களை போல், ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் பருவ பாட புத்தங்களில் இருந்து மட்டும் வினாக்கள் கேட்க அறிவுறுத்த வேண்டும். முதல், இரண்டாம் பருவ வினாக்களுக்கு விடையளிக்க தவறிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தி உள்ளனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமணன்: முதல், இரண்டு பருவ பாடப்புத்தகங்களில் மாணவரின் புரிதல், நிலைப்பு திறனை கருத்தில் கொண்டு,மூன்றாம் பருவத் தேர்வில் அதிக பட்சம் 10-15 வினாக்கள் எளிதில் விடை யளிக்குமாறு வினாக்கள் கேட்கப்பட்டன. விரிவான வினாக்களில் மூன்றாம் பருவ பாட புத்தங்களில் இருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதி தேர்வுக்கான வினாத்தாள், கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று தான் தயாரிக்கப்பட்டது. எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற விதிமுறையால் மாணவர்களை பாதிக்காது, என்றார்.

37 மதிப்பெண்
8ம் வகுப்பு தமிழ் தேர்வில், இரண்டாம் பருவத்தில் ஒரு மதிப்பெண் பிரிவில், 11 கேள்விகள் கேட்கப்பட்டன. 7ம் வகுப்பு தமிழ் தேர்வில், முதல் பருவத்தில் ஒரு மதிப்பெண் வினா 6, இரண்டாம் பருவத்தில் ஒரு மதிப்பெண் வினா 10 என 16 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.6ம் வகுப்பு தமிழ் தேர்வில் முதல் பருவத்தில் ஒரு மதிப்பெண் வினா 6, இரண்டாம் பருவத்தில் ஒரு மதிப்பெண் 4 என 10 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.

No comments: