வேலைவாய்ப்புக்கு தகுதியான பாடத்தை தமிழில் படித்தால் முன்னுரிமை பெறலாம் என்ற தனிநீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்து உத்தரவிட்டது.
ஏ.அகிலா உள்ளிட்ட 6 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
ஆசிரியர் தேர்வு வாரியம் 2013-ல் முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்ய எழுத்துத்தேர்வு நடத்தியது. தமிழ் வழியில் எம்காம் படித்த மாரியம்மாள் தேர்வை எழுதினார். தேர்வில் அவர் வெற்றி பெற்ற போதும், 1-ம் வகுப்பில் இருந்து தமிழில் படிக்கவில்லை என்பதால் தமிழ்வழிக் கல்விக்கான சலுகை மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பணி கிடைக்கப்பெறாத மாரியம்மாள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஆசிரியர் பணிக்கு தகுதியான பாடத்தை மட்டும் தமிழில் படித்து இருந்தாலும் முன்னுரிமை உண்டு என உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாரியம்மாளுக்கு பணி வழங்குவதற்காக தேர்வுவாரியம் பட்டியலை மாற்றியமைத்தது. இதனால் பாதிக்கப்பட்ட 6 பேரும் இந்த மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கைப் பொறுத்தவரையில், தமிழ்வழிக் கல்விக்கான முன்னுரிமை என்பது, 1-ம் வகுப்பு முதல் தமிழில் படித்தவர்களுக்கா அல்லது தகுதிக்கான பாடத்தை மட்டும் தமிழில் படித்தவர்களுக்கா என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பாக அரசு பிறபித்த உத்தரவு மற்றும் சட்டம் ஆகியவற்றில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இதனால் 1 முதல் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என தேர்வு வாரிய அதிகாரிகள் அதற்கு பொருள் கொண்டுள்ளனர். தமிழ் மொழியில் படிப்பதை ஊக்கப்படுத்துவதே சட்டத்தின் நோக்கமாகும்.
இதனால் சட்டம் நிறைவேறிய பிறகு ஆங்கில வழியில் படித்த பலரும் தமிழ்வழிக் கல்விக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு மாறியவர்களுக்கு சட்டத்தின் பயன் கிடைப்பதே சரியாக இருக்கும். எனவே பணிக்குத் தகுதியான பாடத்தை தமிழில் படித்திருந்தாலும் சலுகை பெறலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவு சரியானதே. மதிப்பெண் அடிப்படையில் தான் ஆசிரியர் நியமனம் பெறுவதால் நீதிபதி உத்தரவால் 6 பேரும் பாதிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்கஇயலாது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment