பிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு 8 மார்க்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு 7 மார்க்கும் போனஸாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 கணித தேர்வு மார்ச் 14-ம் தேதி நடந்து முடிந்தது. வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் 4-வது கேள்வியில் ‘ரோ’ என்று அழைக்கப்படும் கணித குறியீட்டுக்கு (ரேங்க் ஆப்) பதிலாக ‘பி’ என்ற ஆங்கில எழுத்து தவறாக அச்சிடப்பட்டிருந்தது.
அதேபோல, 6 மதிப்பெண் பகுதியில் 47-வது கேள்வியில் ‘லாக் எக்ஸ் பேஸ் இ’ என்று இருப்பதற்குப் பதிலாக ‘லாக் இ டூ பவர் எக்ஸ்’ என்பது போன்ற கணித குறியீடுகள் தவறாக அச்சிடப்பட்டு இருந்தன. அச்சுப்பிழை காரணமாக இந்த இரு கேள்விகளுக்கும் மாணவர்கள் சரியாக விடையளித்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்த இரு கேள்விகளுக்கும் விடை எழுத முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் (7 மார்க்) வழங்க வேண்டும் என்று தேர்வெழுதிய மாணவ, மாணவிகள், கணித ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுவாக, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் கேள்விகளில் தவறு இருந்தால் அந்த கேள்விகளுக்கு உரிய மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக (கிரேஸ் மார்க்) மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். இதுதொடர்பாக பாட வல்லுநர் குழு அமைத்து அரசு தேர்வுத் துறை முடிவு செய்யும்.
நிபுணர் குழு அறிக்கை
அந்த வகையில், இந்த ஆண்டு பிளஸ் 2 கணித தேர்வு கேள்வியில் தவறாக அச்சிடப்பட்டிருந்த கேள்விகள் குறித்து ஆராய நிபுணர்கள் குழுவை தேர்வுத்துறை அமைத்திருந்தது. மூத்த கணித ஆசிரியர்கள் அடங்கிய நிபுணர் குழு அச்சுப்பிழை இருப்பதை உறுதிசெய்து அறிக்கை அளித்தது.
பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு கடந்த 21-ம் தேதி தொடங்கிய நிலையில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் முதன்மை தேர்வர்களும், கூர்ந்தாய்வு அதிகாரிகளும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மேற்கொண்டனர்.அப்போது கணித தேர்வுக்கான விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) அவர்களிடம் வழங்கப்பட்டது.
அதில், கணித தேர்வில் தவறாக அச்சிடப்பட்டிருந்த 4-வது கேள்விக்கும் (1 மார்க் வினா), 47-வது கேள்விக்கும் (6 மார்க் வினா) மாணவர்கள் விடை அளிக்க முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்வழி கணித வினாத்தாளில் தவறாக அச்சிடப்பட்டிருந்த 16-வது கேள்விக்கும் (1 மார்க்) இதேபோன்று முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த கேள்வி ஆங்கிலவழி வினாத்தாளில் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தது).
No comments:
Post a Comment