Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 1 March 2014

கல்வி நிறுவனங்கள் உலகத் தரம் பெற நடைமுறை மாற்றங்கள் தேவை

கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவந்தால்தான் இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் உலகத் தரத்துக்கு உருவெடுக்க முடியும் என வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறினார்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிர்வாகம் மற்றும் உலகத் தரத்திலான உயர் கல்வி நிறுவனமாக உருவெடுப்பது தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
இப்போதைய பல்கலைக்கழக நடைமுறை நாட்டின் முன்னேற்றத்துக்கு உகந்தது அல்ல. ஐஐடி, ஐஐஎம் போன்ற நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் எப்போதுமே, மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். கடந்த 2008- ஆம் ஆண்டுவரை இந்த உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகபட்சம் ஐந்தாயிரத்தை தாண்டவில்லை.
அதே நேரம், இந்த கல்வி நிறுவனங்கள் 500 முதல் 700 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டிருப்பதோடு, அவை எதைக் கேட்டாலும் அதைத் தட்டாமல் மத்திய அரசு செய்து கொடுக்கும் நிலையும் உள்ளன.
ஏஐசிடிஇ, யுஜிசி போன்ற உயர்கல்வி மேம்பாட்டு அமைப்புகளுக்கு மட்டுமல்லாமல், மத்திய, மாநில அரசு கட்டுப்பாட்டுக்குள்ளும் இந்த கல்வி நிறுவனங்கள் வருவதில்லை.
தன்னாட்டசி அதிகாரத்தை இவைப் பெற்றிருப்பதனால்தான் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாக திகழ முடிகின்றன.
கல்வித் தரம் இருக்கின்றபோதும், மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. எண்ணிக்கை அதிகரித்தால் தரம் குறைந்துவிடும் என்ற எண்ணமே இதற்கு காரணம்.
ஆனால், வெளிநாடுகளைப் பொருத்தவரை அங்குள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் 30,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
தரத்தையும் அவை உறுதி செய்கின்றன.
இந்தியாவில் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருப்பதோடு, மத்திய அரசு, மாநில அரசு, ஏஐசிடிஇ, மருத்துவ கல்விக் கவுன்சில் போன்ற அங்கீகார அமைப்புகள், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் என 5 வகையான ஒழுங்கு அமைப்புகள் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகின்றன.
உலகத் தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட இடம் பெறாததற்கு நடைமுறை குறைபாடுகளே காரணம்.
இந்த இடர்பாடுகள் அனைத்தையும் தாண்டி, சிறந்த கல்வி நிறுவனமாக உருவெடுக்க வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, மாணவர்-ஆசிரியர் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

No comments: