சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜே.இ.இ., போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவது மற்றும் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய படிப்புகளை நடத்துவது உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கல்வியை வணிகமயமாக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய படிப்புகளை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சி.பி.எஸ்.இ., வாரிய பள்ளிகள் உடனடியாக கைவிட வேண்டும். இவை தினசரி வேலை நாள் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகின்றன.
சில பள்ளிகள், JEE போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை, பள்ளி வளாகத்திற்குள்ளேயே நடத்துகின்றன. இத்தகைய நடவடிக்கைகள், சி.பி.எஸ்.இ., அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இந்த முறைகேட்டை அத்தகையப் பள்ளிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த விஷயத்தில் சி.பி.எஸ்.இ., வாரியத்தின் உத்தரவை மதிக்காத பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று அனைத்து தரப்பாரும், மேற்கூறிய முறையற்ற நடவடிக்கைகள் பற்றி, பொதுவான அளவில் தங்களின் கவலையைத் தெரிவித்துள்ளார்கள்.
இதுபோன்ற செயல்பாடுகளால் மாணவர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. சில பள்ளிகள், மேற்கண்ட வகுப்புகளுக்காக, அதிகளவிலான தொகையை வசூலிக்கின்றன. பள்ளிகள் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படக்கூடாது. சி.பி.எஸ்.இ., வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள கல்வித் திட்டம் முறையாகப் பின்பற்றப்படுகிறது என்பதை ஒவ்வொரு வாரியப் பள்ளியும் உறுதி செய்ய வேண்டும்.
வழக்கமான பாட அட்டவணை மற்றும் பள்ளி நேரத்தை பாதிக்கும் வகையில், எந்தவிதமான பயிற்சி வகுப்புகளும் நடைபெறுதல் கூடாது. வழக்கமான பாட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., மேற்கொண்டுள்ள இந்த புதிய நடவடிக்கைக்கு பெற்றோர்கள் பலர் ஆதரவும், சிலர் பள்ளிகளுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment