Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 28 March 2014

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு: அரசுக்கு இறுதி வாய்ப்பு

பின் தங்கிய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கு, கால அவகாசத்தை நீடிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் பெற்றோர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஏ.நாராயணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப் படியும், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி அரசு வெளியிட்ட ஆணையில், தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடத்துக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் ஆண்டுதோறும் மே மாதம் 3 முதல் 9-ஆம் தேதி வரை, காலை 9 முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த 7 நாள்களில் 2 நாள்கள் வார இறுதியாக அமைந்து விடுகின்றன. மீதம் உள்ள 5 நாள்களில் பின்தங்கியுள்ள, படிப்பறிவில்லாத பெற்றோர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்? இதர மாநிலங்களில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்துகின்றன.
குறிப்பாக கர்நாடகத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விண்ணப்பிப்பதற்கு, ஜனவரி மாதம் 7-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி வரையும், தொடர்ச்சியாக பிப்ரவரி 19-ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட 25 சதவீத இடங்கள் நிரம்பவில்லை என்றால் மார்ச் 15-ஆம் தேதி வரை கூடுதலாக கால அவகாசம் வழங்குகின்றனர்.
தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளை நடமுறைப்படுத்துவதைப் பற்றி அரசு கண்டு கொள்வதில்லை. தமிழகத்தில் 69 சதவீத தகுதி உள்ள குழந்தைகள் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் கல்வி பெற வாய்ப்புகள் இருந்தும், அரசின் இடைக்கால உத்தரவால் கடந்த கல்வி ஆண்டில் அவர்கள் கல்வி வாய்ப்பை இழந்து விட்டனர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதற்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இதுவரை தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. எனவே, என் பிரதான மனு மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை (மார்ச் 27) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசுக்கு இறுதி வாய்ப்பாக ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

No comments: