பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவங்களை மே மாதம் முதல் வாரத்தில் வழங்கவும், ஜூன் 3-வது வாரத்தில் கலந்தாய்வை நடத்தவும் அண்ணா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
பிளஸ் 2 படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் சேர விரும்புவது பொறியியல் படிப்பில்தான். தங்கள் பிள்ளைகள் பொறியியல் படிப்பில் சேர்ந்து ஐ.டி. நிறுவனங்களில் வேலைபார்க்க வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெற்றோரும் விரும்புகிறார்கள்.
கடந்த 3-ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வு வரும் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. கணிதம், உயிரியல் பிரிவு உள்பட ஒரு சில குரூப் மாணவர்களுக்கு வியாழக்கிழமையுடன் (நேற்று) தேர்வு நிறைவடைந்தது. பிளஸ் 2 தேர்வு முடிவுகட்டத்தை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து பெற்றோரின் கவனம் முழுவதும் இன்ஜினீயரிங் கல்லூரிகள் பக்கம் திரும்ப ஆரம்பித்துவிடும்.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் எப்போது வழங்கப்படும் என்று பெற்றோரும் மாணவ, மாணவிகளும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு இன்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைப் பிரிவு செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
2.5 லட்சம் விண்ணப்பங்கள்
கடந்த ஆண்டில் இன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் 2.3 லட்சம் விற்பனையாயின. இந்த ஆண்டு 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக அச்சிடப்படும். விண்ணப்ப படிவங்களை மே முதல் வாரத்தில் வழங்கவும், கலந்தாய்வை ஜூன் 3-வது வாரம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். வழக்கம்போல சென்னையில் கலந்தாய்வு நடத்தப்படும்.
இவ்வாறு ரைமன்ட் உத்தரியராஜ் கூறினார்.
பொறியியல் மாணவர் சேர்க்கையை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. எனவே, பொறியியல் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளில் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment