பிளஸ் 2 பொதுத்தேர்வு திங்கள்கிழமை (மார்ச் 3) தொடங்க உள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூலமாக 8.26 லட்சம் பேரும் தனித் தேர்வர்களாக 53,629 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2,242 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள்களின் பக்கங்கள் அதிகரிப்பு, மாணவர்களின் பதிவெண் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள், டம்மி எண்ணுக்குப் பதிலாக ரகசிய பார்கோடு எண் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
தேர்வுப் பணிகளில் மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வைக் கண்காணிக்கும் பறக்கும் படையில் மட்டும் 4 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விடைத்தாள் முகப்புச் சீட்டில் மாணவர்களின் புகைப்படங்கள், பதிவு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றுவிடும் என்பதால் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் மாணவர்கள் நிம்மதியாக தேர்வு எழுதலாம். தேர்வு எழுதும்போது மாணவர்களின் கவனம் சிதறாமல் இருப்பதற்காக விடைத்தாள் புத்தக பக்கங்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பெரும்பாலான மாணவர்கள் கூடுதல் தாள்களை வாங்காமலேயே அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கலாம்.
65 ஆயிரம் பேர் அதிகம்: தேர்வு எழுதுவோரில் மாணவிகள் 4.45 லட்சம் பேர், மாணவர்கள் 3.80 லட்சம் பேர் ஆவர். மாணவர்களை விட 65,514 மாணவிகள் இந்த ஆண்டு கூடுதலாகத் தேர்வு எழுதுகின்றனர்.
வினாத்தாள் மையங்களுக்குப் பாதுகாப்பு: அதோடு, வினாத்தாள்களின் ரகசியத்தன்மையை முழுமையாகக் காக்கும் வகையில் 20 வினாத்தாள்கள் அடங்கிய சீலிட்ட உறையைப் பிரிப்பதற்கு முன்னதாக, தேர்வு எழுதும் மாணவர்கள் 2 பேரிடம் கையெழுத்தைப் பெற வேண்டும். அவர்கள் முன்னிலையிலேயே உறை திறக்கப்பட்டு, வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், வினாத்தாள்களை எடுத்துவரவும், தேர்வுக்குப் பிறகு விடைத்தாள்களைப் பாதுகாப்பாக எடுத்துச்செல்லவும் வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment