2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு, தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், புலிவளத்தை சேர்ந்தவர் பி.மகேஸ்வரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
தேர்வில் தோல்வி
நான் பி.எஸ்சி. (வேதியியல்) மற்றும் பி.எட். பட்டங்கள் பெற்றுள்ளேன். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 2012–ம் ஆண்டுமார்ச் 7–ந்தேதி தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொண்டு,85 மதிப்பெண் பெற்றேன்.ஆனால், தேர்வில் 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுத்தால் மட்டுமே வெற்றி என்று தமிழக அரசு தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்திருந்ததால், நான் தோல்வி அடைந்தேன்.
மதிப்பெண்ணில் சலுகை
இதன்பின்னர், 2013–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதிலும், அதே தகுதி மதிப்பெண் முறை கடை பிடிக்கப்பட்டது.இந்த நிலையில், தமிழக கல்வித்துறை செயலாளர் கடந்த பிப்ரவரி 6–ந்தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவை சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் என்ற தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை வழங்கி, அதாவது 55 சதவீதம் (82 மதிப்பெண்) என்று தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பாகுபாடு
இந்த சலுகை 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். ஆனால், 2012–ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.அரசின் இந்த உத்தரவு, ஆசிரியர் தகுதி தேர்வுகளை எழுதியவர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் 2013–ம் ஆண்டு நடந்த தேர்வில் கலந்துக் கொண்டவர்களுக்கு மட்டும் சலுகை என்ற உத்தரவு நியாயமற்றது ஆகும். இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
பதில் அளிக்க உத்தரவு
எனவே 2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும், தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment