குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் ஆசிரியர்களின் பி.எட். கல்வித் தகுதியைப் பறிக்க அரசு முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.
நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு குழந்தைகள் உரிமைகள் தொடர்பான மாநில அளவிலான பயிலரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் அவர் பேசியது: குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளை அரசு மிக முக்கியமான பிரச்னையாகப் பார்க்கிறது. இத்தகைய புகார்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 5 ஆசிரியர்கள் இவ்வாறு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அரசுப் பணியிலிருந்து நீக்கப்படும் இந்த ஆசிரியர்கள் வேறு எங்கும் பணிபுரியாத வகையில் அவர்களை ஆசிரியர் பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும், அவர்களது பி.எட். பட்டத்தைப் பறிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
குழந்தைகளிடம் விழிப்புணர்வு: பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆசிரியர்களின் மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இலவச நோட்டுப் புத்தகங்களின் அட்டைகளிலும் வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
புதிய சாஃப்ட்வேர்: இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10 ஆயிரம் பேர் இந்த ஆண்டு புதிதாகப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பள்ளிகளில் இடையில் நின்றுவிடாமல் பள்ளிப் படிப்பை முடிப்பதை உறுதிசெய்யும் வகையில் புதிதாக சாஃப்ட்வேர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாஃப்ட்வேர் மூலம் ஒவ்வொரு மாணவரையும் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
மத்திய அரசு பதில் தரவில்லை: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் நலிவடைந்தப் பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கட்டணத்தை திருப்பிச் செலுத்த குறைந்தபட்சம் ரூ.25 கோடி தேவைப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றார் சபிதா.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங், அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment