Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 17 January 2014

இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்- சீனியாரிட்டிக்கு பதில் 'வெயிட்டேஜ் மதிப்பெண்' அறிமுகம்

 
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) பதிலாக பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று “வெயிட்டேஜ் மதிப்பெண்” முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம்
ஆர்.டி.இ. எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால், கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரையில், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் (வெயிட்டேஜ் மதிப்பெண்) தேர்வுசெய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகின்றனர்.
இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மாற்றம்
இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களும் “வெயிட்டேஜ் மதிப்பெண்” முறையிலேயே தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள்.
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி முறை நடைமுறைக்கு வந்தபோது பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எனினும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கு முடியும் வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் (தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களில்) நியமிக்கப்படுவார்கள் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அறிமுகம்
தற்போது அந்த வழக்கு முடிவடைந்துவிட்டதால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று வெயிட்டேஜ் மதிப்பெண் முறையிலேயே தேர்வுசெய்ய அரசு முடிவுசெய்திருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முறையில், தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் (அட்டவணையில் மதிப்பெண் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது) ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த தகுதித்தேர்வு மூலமாக சுமார் 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Anonymous said...

We affected in amma1992 teacher institute,fighted for 12yrs . got training seat in diets