பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் உள்ளடக்கிய "சாஸ்த்ரா ராமானுஜன் விருது' ஜெர்மனி நாட்டின் பான் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீட்டர் ஷோல்ஸ்-க்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கணிதமேதை ராமானுஜன் தொடர்புடைய கணிதத்தில், 32 வயதுக்குள் சாதனைபுரியும் இளம் கணித மேதைகளுக்கு 2005-ம் ஆண்டு முதல் சாஸ்த்ரா ராமானுஜன் விருது வழங்கப்பட்டு வருகிறது.
எண் இயற்கணித வடிவியல் மற்றும் சுயமாற்ற வடிவங்கள் தொடர்பான ஆய்வுகள், கேலோயிஸ் குறியீட்டு வடிவங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் "சாஸ்த்ரா ராமானுஜன் விருது- 2013' வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு புதுதில்லி, அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வமைப்பின் செயலர் டி.கே. சந்திரசேகர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் கிருஷ்ணசாமி அல்லாடி, பேராசிரியர் ரேப்போபோர்ட், பேராசிரியர் கே.ஜி. ரகுநாதன், கணிதத் துறை தலைவர் டி. நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான விருதை ஜெர்மனி நாட்டின் பான் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீட்டர் ஷோல்ஸ்-க்கு (26) சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். சேதுராமன் வழங்கினார்.
பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் பாராட்டுப் பத்திரம் உள்ளடக்கிய இவ்விருது, உலக அளவில் கணிதத் துறையில் குறிப்பிடத்தக்க விருதாகும்.
முன்னதாக, சாஸ்த்ரா நிதிசார் ஆய்வுப் புலத் தலைவர் முனைவர் எஸ். சுவாமிநாதன் வரவேற்றார். நிறைவில், கலை அறிவியல் புலத் தலைவர் முனைவர் கே. கண்ணன் நன்றி கூறினார்.
ஜெர்மனி நாட்டு பேராசிரியருக்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருது வழங்குகிறார் சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சேதுராமன். உடன் (இடமிருந்து) நரசிம்மன், ரேப்போபோர்ட், சந்திரசேகர், கிருஷ்ணசாமி அல்லாடி, சுவாமிநாதன்.
No comments:
Post a Comment