கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் அற்புதமான படிப்புகள் பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம். இவற்றைப் படிக்க ஆர்வம் அவசியம். மேலும் இவற்றைப் படிப்பவர்கள் ஆசிரியர் பணிக்குதான் செல்ல வேண்டும் என்று இல்லை. ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் எம்.பி.ஏ., டெக்னிக்கல் ரைட்டிங், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள், டிராவல்ஸ் டூரிஸம், மொழிபெயர்ப்பாளர், பப்ளிக் ரிலேஷன்ஷிப் என பல பரிமாணங்களில் பிரகாசிக்கலாம். சர்வதேச நிறுவனங்களில் மொழி பெயர்ப்பாளர் பணிகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஆனால், அப்பணிக்கு ஏற்ற தகுதி, திறமையுடன்கூடிய ஆட்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. தவிர, நிறைவான ஊதியத்தில் அரசு ஆசிரியர் பணியிலும் சேரலாம்.
தற்போது தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் 15 லட்சம் மாணவர்கள் எழுதுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு கூடுதலாக 50 % கல்வி நிறுவனங்கள் தேவை. இதனால், பி.ஏ., பி.எட். முடித்த ஆங்கில இலக்கிய ஆசிரியர் பணியிடத்துக்கான தேவை அதிகரிக்கும். எனவே, பி.ஏ., பி.எட். மற்றும் எம்.ஏ., எம்.எட். படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் உள்ளது. எம்.பில்., பிஎச்.டி. போன்ற ஆராய்ச்சிப் படிப்புகள் மூலம் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆங்கில இலக்கியத்துக்கு இணையாக பி.ஏ. தமிழ், இலக்கியம் படிப்பவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. வருங்காலத்தில் கல்வித் துறையில் மும்மொழித் திட்டத்தை செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதன்மூலம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் கட்டாயப் பாடமாகும் நிலை உருவாகும். மேலும், இதழியல் (ஜர்னலிசம்), எம்.பி.ஏ., விஷுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளைத் தேர்வு செய்வதன்மூலம் கலை, பண்பாட்டுத் துறைகள் போன்ற துறைகளிலும் வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
இது மட்டுமின்றி, தமிழ், ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பெருமளவு வெற்றி பெறுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
கலை, இலக்கியம், மீடியா ஆகிய துறைகளில் சாதிக்க நினைப்பவர்கள் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், ஆங்கில இலக்கியம் ஆகிய பட்டப்படிப்பிலிருந்து தங்களது உயர்கல்வியைத் துவங்கலாம். மேலும், மொழி மீது அதிக ஆர்வம் உள்ளவர்கள்
தங்களது மனதுக்குப் பிடித்த கல்வியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நல்ல சாதனையாளராக உருவெடுக்க முடியும். அரசுப் போட்டித் தேர்வுகள் எழுதுவதால் உயர் பொறுப்புகளுக்கும் செல்ல முடியும்.
No comments:
Post a Comment