சி.ஏ. படிப்பது பலரது கனவு. போராடிக் கிடைக்கும் வெற்றிக்கு தனி மதிப்பு உண்டுதானே. அப்படிதான் சி.ஏ.வும். அதைப் படிக்க விரும்புபவர்கள் தீவிர லட்சியத்துடன் திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம். கணிதவியல் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, கணிதப் பாடப் பிரிவு படித்தவர்களும் சி.ஏ. படிக்கலாம். உலகம் முழுவதும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. எனவே, சி.ஏ. படித்தவர்களுக்கு எப்போதுமே சிறப்பான எதிர்காலம் உண்டு.
இதைப் படிக்க விரும்புவோர் கணிதவியல், புள்ளியியல், வரி இனங்கள், சட்டம் போன்றவற்றில் அடிப்படை அறிவு பெற்றிருப்பது அவசியம். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே சி.ஏ. கவுன்சில் மூலம் சி.பி.சி. (காமன் புரஃபிசியன்சி கோர்ஸ்) மெட்டீரியலை வாங்கிப் படிக்கலாம்.
பிளஸ் 2 முடித்தவுடன் சி.பி.டி. (காமன் புரஃபிசியன்சி டெஸ்ட்) தேர்வு எழுதலாம். ஜூன், டிசம்பர் என ஆண்டுக்கு இரு முறை இத்தேர்வு நடக்கிறது. இதை எழுத 3 மாதங்களுக்கு முன்பே சி.ஏ. கவுன்சிலில் பதிய வேண்டும்.
இத்தேர்வு முதல் பகுதியில் இரண்டு பிரிவாகவும், இரண்டாம் பகுதியில் இரண்டு பிரிவாகவும் நடத்தப்படுகிறது.
இதில் தேறியவர்கள் ஓரியன்டேஷன் புரோகிராமுக்கு செல்லவேண்டும். அதன் பின்பு, இன்பர்மேஷன் டெக்னாலஜி டிரெய்னிங் (ஐ.டி.டி.) மொத்தம் 100 மணி நேரம் நடக்கும். சி.ஏ. தேர்வு எழுதுவதற்குள் இந்த 100 மணி நேரப் பயிற்சியை நிறைவு செய்வது அவசியம்.
அடுத்ததாக, இன்டர்மீடியட் தேர்வு. இதுவும் இரு பிரிவுகளைக் கொண்டது. ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றால் சி.ஏ. பிராக்டிஸ் செய்யும் ஆடிட்டரிடம் 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும்.
பயிற்சிக்குச் செல்வதால் பணிச் சுமை, ஆர்வமின்மை, நேரம் போதாமை போன்ற காரணங்களால் மற்றொரு தேர்வில் தேர்ச்சி பெறுவது சிரமமாகத் தெரியலாம். அதனால், இரு பிரிவிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, ஆடிட்டரிடம் பயிற்சிக்குச் செல்வது நல்லது.
இன்டர்மீடியட் தேர்வில் இரு பிரிவிலும் தேர்ச்சி பெற்று, ஆடிட்டரிடம் 3 ஆண்டுகள் பயிற்சி முடித்த பின்னரே, சி.ஏ. இறுதித் தேர்வுக்கு செல்ல முடியும்.
பி.காம்., பி.பி.ஏ., மற்றும் கணிதப் பாடம் எடுத்து பட்டப் படிப்பு முடித்தவர்கள் காமன் புரஃபிசியன்சி டெஸ்ட் (சி.பி.டி.) தேர்வு எழுதத் தேவையில்லை. நேரடியாக சி.ஏ. தேர்வுக்கு தயாராகலாம்.
சி.ஏ. படித்து முடிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே, வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. வருமானமும் மிக அதிகம். ‘சி.ஏ. தேர்வில் வெற்றி’ என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு படித்தால் வெற்றி நிச்சயம்!
No comments:
Post a Comment