Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 18 December 2013

ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை: யுஜிசி அறிவிப்பு

ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 2014 ஜனவரி 16 கடைசி தேதியாகும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிகள், குறிப்பிட்ட பேராசிரியர் ஓய்வு பெறுவதால் தடைப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, இப்படியொரு உதவித் தொகைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இது போல் 2013-14 ஆம் ஆண்டுக்கான உதவித் தொகை திட்டம் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன துறைகளுக்கு?: அறிவியல் துறையில் 100 பேராசிரியர்கள், மனிதப் பண்புகள், சமூக அறிவியல், மொழித் துறைகளில் 100 பேராசிரியர்கள் என மொத்தம் 200 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
தகுதி என்ன?: இதற்கு விண்ணப்பிக்கும் பேராசிரியர்கள் யுஜிசி சட்டம் 2 (எஃப்) மற்றும் 12 (பி) பிரிவுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டியதோடு உயர்ந்த கல்வித் தகுதியும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று 70 வயதை நிறைவடையாதவராகவும் அல்லது அடுத்த 6 மாதங்களில் ஓய்வு பெறப் போகின்றவராகவும் இருக்க வேண்டும்.
பேராசிரியர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியின் தரம், வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் போன்றவையும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
உதவித் தொகை எவ்வளவு?: இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஓய்வுபெற்ற பேராசிரியருக்கு மாதம் ரூ. 20,000 உதவித் தொகை யுஜிசி சார்பில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
அது மட்டுமன்றி ஆராய்ச்சி தொடர்பாக இந்தியாவுக்குள் மட்டும் சென்று வருவதற்கான போக்குவரத்துச் செலவு, எழுது பொருள் செலவுகள், புத்தகங்கள் என்பன உள்ளிட்ட இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ. 50,000 உதவித் தொகையும் வழங்கப்படும்.
இதற்கு www.ugc.co.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க 2014 ஜனவரி 16 கடைசி தேதியாகும்.

No comments: