Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 18 December 2013

அரசு பள்ளிகளில் 2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப அனுமதி

அரசு பள்ளிகளில் 887 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது.
பாடவாரியாக காலி யிடங்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் காலி பணியிடம்
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் ஏறத்தாழ 15,000 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.
இதேபோல், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு சென்ற ஜூலை மாதம் போட்டித்தேர்வு நடந்தது.
இந்த காலியிடங்கள் அனைத்தும் 2012-2013-ம் கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் ஆகும். தேர்வுப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. வழக்குகள் காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவின் அடுத்த பணிகள் தாமதமாகி வருகின்றன.
2,695 இடங்களுக்கு அரசு அனுமதி
இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2013-2014) ஆசிரியர் பணியிடங்களில் 887 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 ஆசிரியர் இடங்களை நேரடியாக நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் விவரம் வருமாறு:-
முதுகலை பட்டதாரி ஆசிரியர் – 981
பட்டதாரி தமிழாசிரியர் – 115
பட்டதாரி ஆசிரியர் (இதர பாடங்கள்) – 417
உடற்கல்வி ஆசிரியர் – 99
ஓவிய ஆசிரியர் – 57
இசை ஆசிரியர் – 31
தையல் ஆசிரியர் – 37
தொடக்கக்கல்வித்துறையில் நேரடி நியமனத்துக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரம் வருமாறு:-
இடைநிலை ஆசிரியர் – 887
உடற்கல்வி ஆசிரியர் – 17
மேற்கண்ட காலி பணியிடங்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேரடி நியமனங்கள் தவிர பள்ளிக்கல்வித் துறையில் பதவி உயர்வு மூலமாக 981 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், 230 தமிழாசிரியர் பணியிடங்களையும், 471 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், 14 ஓவிய ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல், தொடக்கக்கல்வித் துறையில், பதவி உயர்வு மூலமாக 314 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களையும், 380 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது.
புதிதாக தேர்வு நடத்தப்படுமா?
இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா பிறப்பித்துள்ளார்.
மேலும், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.) பணியாற்றும் 115 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்தவும், 335 வட்டார மேற்பார்வையாளர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கவும் அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
நடப்பு கல்வி ஆண்டுக்கு அரசு அனுமதி அளித்துள்ள 2,695 ஆசிரியர் பணியிடங்களும் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்படுமா? அல்லது புதிய தேர்வுகள் வைத்து நிரப்பப்படுமா? என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்யும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

No comments: