Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 19 December 2013

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: நேரடியாக பறக்கும் படை நியமிக்கிறது மாநில பள்ளி கல்வித்துறை

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு மாற்றங்களை கல்வித்துறை செய்து வருகிறது. தற்போது, தேர்வறையை கண்காணிக்கும் மேற்பார்வையாளர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளை கல்வித்துறை உயரதிகாரிகளே நேரடியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் இணைந்து தேர்வறைக்குள் செல்லும் அதிகாரம் படைத்த பறக்கும்படை மற்றும் சூபர்வைசர்களை நியமிப்பர். தேர்வுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன், ரகசியமாக இந்த உத்தரவு அவர்களுக்கு வழங்கப்படும்.
பெரும்பாலான மாவட்டங்களில் அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது தங்களுக்கு தெரிந்த ஆசிரியர்கள் பறக்கும் படையில் வந்து விடுவதால், பள்ளி நிர்வாகங்கள் "குஷி"யாகி விடுகின்றன. முறைகேடு நடக்கும் வாய்ப்பு எளிதில் உருவாகி விடுகிறது. எனவே, சில மாற்றங்களை பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுத்தேர்வு மையங்களை கண்காணிக்கக்கூடிய சூபர்வைசர், பறக்கும் படை அதிகாரிகள் விவரத்தை கல்வித்துறை இயக்குனரகம் அறிவிக்க உள்ளது. மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலையிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலைமை ஆசிரியர், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், கடந்தாண்டு பறக்கும் படையில் இருந்தவர்கள், கண்காணிப்பாளர்கள் குறித்து பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், கல்வித்துறைக்கு பட்டியல் அனுப்பி வைக்க வேண்டும். பட்டியலை இறுதி செய்து, மாவட்டம், தேர்வு மையம் வாரியாக, ஒவ்வொருவர் பணியாற்றும் இடங்களை கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பார். அதன்படி மட்டுமே பணியாற்ற வேண்டும்; மாற்றங்கள் செய்யக்கூடாது.
உத்தரவு நகல் முதன்மை கல்வி அலுவலர் வசம் ஒப்படைக்கப்படும். அவர் பணிகளை மேலாண்மை செய்வார். கல்வித்துறை இயக்குனரகமே கண்காணிப்பாளர், சூபர்வைசரை நியமிப்பது இதுவே முதல்முறை. இவ்வாறு, அவர் கூறினார்.
தேர்வறை மட்டுமின்றி, தேர்வுத்தாள் திருத்தும் மையங்களுக்கான ஆசிரியர், கண்காணிப்பாளர் மற்றும் உயரதிகாரியையும், கல்வித்துறை இயக்குனரகமே நியமிக்க உள்ளது. இதனால், எந்த ஊரில், எந்த மையத்தில் நம்மை நியமிக்கப் போகிறார்களோ என்ற கலக்கத்தில் தலைமை ஆசிரியர்கள், கடந்தாண்டு தேர்வுத்தாள் திருத்திய ஆசிரியர்கள் உள்ளனர்.

No comments: