ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) அறிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாவது ஆண்டாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று தாள் ஒன்றும், அதற்கடுத்த நாள் (ஆகஸ்ட் 18) தாள் இரண்டுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.
இரண்டு மாதங்களில் முடிவுகள்:
தேர்வு முடிவுகளை இரண்டு மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தாள் ஒன்றினை 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரும், தாள் இரண்டினை 4 லட்சத்து 311 பேரும் எழுதினர். இதில் தாள் ஒன்று தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 60 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண்களை 12 ஆயிரத்து 596 பேர் பெற்றுள்ளனர். அதன்படி தேர்ச்சி சதவீதம் 4.80 சதவீதமாகும். அதில், ஆண்களின் தேர்ச்சி 4.56 சதவீதமாகவும், பெண்களின் தேர்ச்சி 4.88 சதவீதமாகவும் உள்ளது.
மொழிப்பாடங்களில் எத்தனை பேர்:
மொழிப் பாடங்களைப் பொறுத்தவரையில், தாள் ஒன்றில் தமிழ் மொழியில் 12 ஆயிரத்து 433 பேரும், தெலுங்கில் 106 பேரும், மலையாளத்தில் 20 பேரும், உருதுவில் 23 பேரும், கன்னடத்தில் 14 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தாள் இரண்டில் ஆண்களின் ஆதிக்கம்:
பட்டதாரிகள் அதிகளவில் பங்கேற்ற தாள் இரண்டினைப் பொறுத்தவரையில், 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 14 ஆயிரத்து 496 பேர். தேர்ச்சி சதவீதம் 3.62. தாள் ஒன்றில் பெண்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தாள் இரண்டினைப் பொறுத்தவரையில் ஆண்களே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்களின் தேர்ச்சி சதவீதம் 4.16 ஆக உள்ளது. பெண்கள் 3.39 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தாள் இரண்டில் தமிழ் மொழியில் 14 ஆயிரத்து 363 பேரும், தெலுங்கில் 107 பேரும், மலையாளத்தில் 10 பேரும், உருதுவில் 6 பேரும், கன்னடத்தில் 10 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment