ஐ.ஐ.எம். எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் உயர்கல்வி நிறுவனங்களில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட முதுநிலை பட்டப் படிப்பிலும் (எம்.பி.ஏ.) முதுநிலை பட்டயப் படிப்புகளிலும் சேருவதற்கு கேட் என்ற பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வு தனி ரகம். ஐ.ஐ.எம். நீங்கலாக இதர கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எம்.பி.ஏ. படிப்புக்கு மாணவர்களைச் சேர்க்க தனித்தனியே நுழைவுத் தேர்வுகளை நடத்திவந்தன.
இதனால் மாணவர்கள் ஒவ்வொரு கல்வி நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். தனித்தனி தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் அவர்களுக்குச் சுமை ஒருபுறம். கட்டணச் செலவு மற்றொருபுறம். மாணவர்களின் இந்த சுமையைப் போக்கும்வண்ணம் மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியதுதான் சிமேட் (CMAT) என்று அழைக்கப்படும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வு. அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் எம்.பி.ஏ. படிப்பில் சேருவதற்கு இந்த ஒரு நுழைவுத் தேர்வை மட்டும் எழுதினால் போதும். இந்த தேர்வு மதிப்பெண்ணை வைத்து ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளிலும் எம்.பி.ஏ. படிப்பில் சேர்ந்துவிடலாம்.
சிமேட் நுழைவுத்தேர்வை ஏ.ஐ.சி.டி.இ. ஆண்டுக்கு 2 முறை (பிப்ரவரி, செப்டம்பர்) நடத்துகிறது. இந்த நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். தற்போது பட்டப் படிப்பு இறுதி ஆண்டு படிப்பவர்களும் சிமேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தேர்வைப் பொருத்தவரை, பொது விழிப்புத்திறன், ஆங்கிலம், நுண்ணறிவுத்திறன், கணிதம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. தவறான விடைக்களுக்கு மைனஸ் மதிப்பெண்ணும் உண்டு. எனவே, கண்ணை மூடிக்கொண்டு விடையளித்தால், சரியாக பதில் அளித்த கேள்விகளுக்கான மதிப்பெண்ணையும் இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வு முழுக்கமுழுக்க ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் சிமேட் நுழைவுத்தேர்வில் மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ள ஒருமுறை வாய்ப்பு அளிக்கப்படும்.
2014-2015ஆம் கல்வி ஆண்டுக்கான முதல் சிமெட் தேர்வுக்கு ஏ.ஐ.சி.டி.இ. தற்போது அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வு அடுத்தடுத்து நடத்தப்பட உள்ளது. இதற்கு ஜனவரி 2ஆம் தேதி வரை www.aicte-cmat.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முடிவு மார்ச் 14ஆம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினமே மதிப்பெண் பட்டியலையும் ஆன்லைனில் வெளியிட்டுவிடுவார்கள். கையோடு மெரிட் பட்டியலையும் சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் ஏ.ஐ.சி.டி.இ. அனுப்பிவைத்துவிடும்.
இதர கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. சேருவதற்கும் சிமேட் நுழைவுத் தேர்வை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment