Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 11 November 2013

அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒருவழிப் பதவி உயர்வு

முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணை 720 இல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள்ள இருவழிப் பதவி உயர்வு என்பதை, அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒருவழிப் பதவி உயர்வு எனத் திருத்தம் மேற்கொள்ள, அரசுக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
  இது தொடர்பாக, அக்கழகத்தின் மாநில அமைப்புச் செயலர் ரா. பிரபாகரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
  எங்கள் கழகத்தின் மாநிலப் பொதுக் குழுவில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பொதுக் குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆறாவது ஊதியக் குழுவினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 7 ஆம் தேதி 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் கோட்டை நோக்கி பேரணி செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.   அரசாணை 234 இல் உள்ள குறைகளை நீக்க, ராஜீவ் ரஞ்சன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு மற்றும் அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட உமாநாத் தலைமையிலான மூவர் குழு ஆகியவற்றால், எந்த முறையிலும் எங்களது நீண்டநாள் கோரிக்கையான அடிப்படை ஊதிய மாற்றம் தீர்மானிக்கப்படவில்லை.
  முதுகலை ஆசிரியருக்கு சமமாக கல்வித் தகுதிபெற்ற ஒரு பட்டதாரி ஆசிரியரானவர், தற்போதுள்ள ஊதிய கட்டமைப்பினாலும், நடைமுறையினாலும் முதுகலை ஆசிரியரை விட, மொத்த ஊதியத்தில் ரூ. 1,216 அதிகமாகப் பெறுகிறார். இதைப்போன்று, ஒரு நிலை உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களிடையே ஏற்பட்டபோது, மூவர் குழுவானது அதனைக் களைய 22.7.2013 அரசாணை மூலம் உதவியாளர் பணியிடத்துக்கு தனி ஊதியம் அனுமதித்துள்ளது. மேலும், முதுகலை ஆசிரியர்களுடன் சமஊதிய விகிதத்தில் இருந்தவர்களுக்கு, அடுத்த ஊதியக் கட்டமைப்போ அல்லது தனிப்படியாகவோ ரூ. 1,000 அனுமதித்துள்ளது. மேற்கூறிய காரணங்களைக் கருத்தில்கொண்டு, முதுகலை ஆசிரியர்களுக்கு தனிஊதியமாக ரூ. 2,500 அளிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  தமிழகத்தில், 2003-2004 ஆம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 1.6.2006 முதல் பணிவரன்முறை செய்யப்பட்டனர். அவர்கள் பணியேற்ற நாள் முதல், அவர்களின் பணியினை பணிவரன்முறை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். 2003 ஆம் ஆண்டு முதல் பணியேற்ற ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.   இம்முறை, அவர்களின் ஓய்வுகால வாழ்க்கைக்கு பாதுகாப்பானது அல்ல. எனவே, அவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  ஆதி திராவிடர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை போன்ற இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும். முப்பது ஆண்டு காலம் ஒரே பதவியில் தொடர்ந்து பணிபுரிகின்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கிட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பொதுக் குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

No comments: