உலகிலேயே மிகப் பழைமை வாய்ந்த மேடை நாடகப் பயிற்சி வழங்கி வரும் மிகச் சில கல்வி நிறுவனங்களில் ஒன்று தேசிய மேடை நாடக பயிற்சிப் பள்ளி (The National School of Drama) நம் தலைநகர் தில்லியில் தன் கல்விப் பணியை செய்து வருகிறது. 1956-ம் ஆண்டில் கல்வி தொடர்பாக சங்கீத நாடக அகதெமி சார்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் யுனெஸ்கோ உதவியுடன் இத்தகைய பள்ளியைத் தொடங்கலாம் என்று யோசனை கூறப்பட்டது. மத்திய பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இப்பள்ளியை சங்கீத நாடக அகாதெமி 1959 ஆம் ஆண்டில் நிறுவியது. மத்திய பண்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியில் இயங்கி வரும் இந்நிறுவனம் திட்டமிட்ட, முழுமையான பாடத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து வருகிறது. தலை சிறந்த மேடை நாடக வல் லுநர்கள் கையாளும் நாடகத்திறனை முன்னோடியாகக் கொண்டு இப்பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய நாடக வடிவங்கள், சம்ஸ்கிருத நாடகங்கள், நவீன நாடகங்கள், ஆசிய, மேலை நாட்டு நாடகங்கள் போன்ற பல தரப்பட்ட நாடகக் கலைகளை முழுமையாக ஆராய்ந்து நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்படுத்தக்கூடிய அம்சங்களின் அடிப்படையில் பயிற்சியும் களப் பயிற்சியும் வழங்கப்படுகின்றன. இது மாணவர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தருகிறது. பயிற்சி மூன்று ஆண்டு காலம் நடத்தப்படுகிறது. புத்தகக் கல்வி, செயல்முறைப் பயிற்சி, களப் பயிற்சி ஆகியவற்றுடன், பல்வேறு மையங்களில் பயிலரங்கு உள்ளிட்டவை மூலம் மாணவர்கள் விரிவாக்கக் கல்வித் திட்டத்தின் கீழ் தங்களது திறனை வளர்த்துக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கான நாடகப் பயிற்சியும் இப்பள்ளியின் குறிப்பிடத் தக்க அம்சம் ஆகும். கருத்தரங்கில் தோன்றிய யோசனை. இரண்டு ஆண்டுகளில் அது செயல் வடிவம் பெற்றது. ஆசிய தியேட்டர் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்தை சங்கீத நாடக அகடெமி எடுத்துக் கொண்டது. ஓர் ஆண்டு கழித்து 1959 ஆம் ஆண்டில் தேசிய மேடை நாடகப் பள்ளி புது தில்லியில் உருவானது. ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் கீழ்பட்டப் படிப்பு முடித்தவர்கள், குறைந்தது ஆறு மேடை நாடகங்களை நடத்தியவர்கள், ஆங்கிலம், ஹிந்தி மொழி பேசத் தெரிந்தவர்கள் இந்நிறுவனத்தில் பயிற்சியில் சேரலாம்.
வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 26 இடங்களில் தலித் மாணவர்களுக்கு நான்கு, பழங்குடியினருக்கு ஒன்று, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கைக்கான தேர்வு தில்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களுரு, குவாஹாட்டி ஆகிய நகரங்களில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்டோர் நான்கு அல்லது ஐந்து நாள் நடைபெறும் பயிலரங்கில் பங்கேற்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ. ஆறாயிரம் உதவித் தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: www.nsd.gov.in
No comments:
Post a Comment