தமிழ்மொழி ஆர்வத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்க பள்ளி வகுப்பறைகளுக்குள் நாளிதழ்களை நகர்த்திக் கொண்டு செல்ல வேண்டும் என, பத்திரிகையாளர் மாலன் தெரிவித்தார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றுவரும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுக்கான பயிற்சி முகாம்-2013-ன் மூன்றாவது நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
துவக்க நிகழ்ச்சியில், "தமிழ்மொழி கற்றல், கற்பித்தலில் தமிழ் இதழ்களின் பயன்பாடு' என்ற தலைப்பில் மாலன் பேசியதாவது:
பள்ளிப் பாடப் புத்தகங்களில் வழக்கில் இல்லாத வார்த்தைகள் ஏராளமாக இருப்பதால், குழந்தைகள் தானாகப் படிக்கும்போது மொழிக்கு அருகில் அவர்கள் வருவதை நகர்த்தி விடுகிறது. வீடுகளில் தாயார் சொல்லித் தரும் மொழி வார்த்தைக்கும், பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித்தரும் வார்த்தைக்கும் வேறுபாடுகள் இருப்பதும் மொழி கற்கும் குழந்தைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளுக்குக் கற்பிக்கும்போது, மொழியின் மீதான ஆர்வத்தை முதலில் உருவாக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வகுப்பறைகளில் மொழியை விளையாட்டின் மூலமாக கற்பித்தனர். மொழியின் மீதான ஆர்வத்தையும் உருவாக்கியது. இன்றைய காலகட்டம் அப்படியில்லை.
நம்முடைய கல்வியும், ஆசிரியர்களும் அதிக மதிப்பெண்களை எடுக்கும் இலக்கை நோக்கியே மாணவர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். பொதுவான சந்தேகங்களைக் கேட்கவரும் மாணவ, மாணவியரையும், தேர்வுக்குப் படிக்குமாறு ஆசிரியர்கள் துரத்தியடிக்கும் நிலை உள்ளது. இதனால், தனக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை தெரியாமல் மாணவர்கள் குழப்பத்திற்குள்ளாகின்றனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள்தான் அதிக அளவில் இருக்கின்றன. சிறந்த பள்ளியாக உயர்த்திக் கொள்வதில், இந்தப் பள்ளிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது.
எந்தப் பள்ளி மாணவர் உயர்ந்த மதிப்பெண் எடுக்கிறாரோ, அந்தப் பள்ளிதான் சிறந்த பள்ளி என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால், தங்களது பள்ளியின் நிலையை உயர்த்துவதற்காக, மிக உயர்ந்த மதிப்பெண் பெறுவதற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பணியில்தான் கவனமாக இருக்கின்றனர். இதனால், மொழியைக் கற்பிப்பதில் நெருக்கடிக்கு ஆளாகின்றனர் ஆசிரியர்கள். மொழியும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது.
இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு மொழி ஆர்வத்தைத் தூண்டுவதற்கு, கற்பதற்கு தினம் தினம் சந்திக்கும் இடமான ஊடகங்கள், பத்திரிகைகளால் முடியும். உச்சரிப்பு பயிற்சி, எழுத்தறிதல், வார்த்தை வளத்தை வளப்படுத்துதல், இலக்கணப் பயிற்சிகள், வாக்கிய அமைப்புகளை இவற்றின் மூலம் அறியலாம்.
தமிழகத்தில் 15, 20 ஆண்டுகளாக வட மாநிலத்திலிருந்து வரும் நடிகைகள் எல்லாம் பத்திரிகை படித்து தமிழ் கற்றுக் கொண்டோம் என கூறுவதில் அர்த்தம் இருக்கிறது. அதேசமயம், சில பத்திரிகைகள் ஆங்கில மொழிக் கலப்பு, கொச்சையான வழக்குகளைக் கையாளுதல், நெடிய வாக்கியங்களைப் பயன்படுத்துதல், இலக்கணப் பிழைகளுடன் செய்திகளை வெளியிடுகின்றன. இதுபோன்ற சூழலில் தரமான நாளிதழ்களை வகுப்பறைகளுக்குள் கொண்டு செல்வதன் மூலம் குழந்தைகளுக்கு மொழி ஆர்வத்தை ஊக்குவிக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment