மத்திய அரசின் மாதிரிப் பள்ளித் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி அளித்தது முந்தைய திமுக அரசுதான் என முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் மாதிரிப் பள்ளித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்திற்கு அப்போது ஒப்புதல் அளித்துவிட்டு தற்போது கருணாநிதி எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இத்தகைய பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மட்டுமே கற்பிக்கப்படுவது கருணாநிதிக்கு தெரியாதா என அவர் வினவியுள்ளார்.
மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் பொது-தனியார் பங்களிப்புடன் இந்தியாவில் முதல்கட்டமாக 41 மாதிரிப் பள்ளிகள் துவங்கப்பட உள்ளதாகவும் அதில் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
500 ஒன்றியங்களில் இந்த பள்ளிகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்பந்தம் கோரியபோதிலும் தமிழ்நாட்டில் இருந்து இதுவரை யாரும் ஒப்பந்தம் கோரவில்லை என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
காவிரி, முல்லைப்பெரியாறு, என்.எல்.சி பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுத்ததுபோன்று, இந்த பிரச்னையிலும் தமிழர்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment