தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சிறந்த இயக்குனரகமாகத் தேர்வு பெற்று விருது பெற்றுள்ளது தேசிய மாணவர் படையின் தமிழக இயக்குனரகம்.
நாடு முழுக்க 17 தேசிய மாணவர் படை இயக்குனரகங்கள் உள்ளன. தமிழகம், புதுவை மற்றும் அந்தமான் நிகோபர் ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கியது தமிழக இயக்குனரகம். ராணுவம், விமானம், கடற்படை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்ட தேசிய மாணவர் படையில் விமானப் பிரிவு மாணவர்களுக்கென ஒவ்வொரு ஆண்டும் 'அனைத்திந்திய வாயு சைனிக்' எனும் சிறப்பு முகாம் நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் இந்தச் சிறப்பு முகாம் இந்த ஆண்டு பெங்களூரூவில் அக்டோபர் 20ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடந்தது.
மொத்தம் 420 மாணவர்களும் 180 மாணவிகளும் கலந்து கொண்ட இந்த முகாமில் தமிழக இயக்குனரகத்தில் இருந்து 42 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். மூன்று மாத கடினப் பயிற்சிகளுக்குப் பிறகு இந்த 42 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தச் சிறப்பு முகாமில் பங்கேற்ற தமிழக மாணவர்கள் முகாமில் நடைபெற்ற விமானத்தில் பறத்தல், விமான வடிவமைப்பு, முகாமிடுதல், துப்பாக்கி சுடுதல், சுகாதார விழிப்புணர்வு, உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று முன்னிலையில் இருந்தனர். அதைத் தொடர்ந்து தமிழக இயக்குனரகத்துக்கு இரண்டாவது முறையாகச் சிறந்த இயக்குனரக விருது வழங்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவர்களைக் கெளரவிக்கும் விதமாக நவம்பர் 1-ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் தேசிய மாணவர் படை தமிழக இயக்குனரகத்தின் துணை இயக்குனர் கே.எஸ்.ஐயப்பா பங்கேற்றுப் பேசும் போது, "தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சிறந்த இயக்குனரக விருது பெறுவது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. இதைத் தக்க வைத்துக் கொள்ள நாம் பாடுபட வேண்டும்" என்றார்.
இந்தச் சிறப்பு முகாமில் பங்கேற்ற மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா பேரணியில் கலந்து கொள்ள இயலாதது பற்றிய கேள்விக்கு அவர், "தேசிய மாணவர் படையில் விமானப் பிரிவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என பதிலளித்தார்.
No comments:
Post a Comment