கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) முடிவு செய்துள்ளது.
நெட் தகுதித் தேர்வு
பல்கலைக்கழகம், கல்லூரி களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. முடித்திருந்தால் மட்டும் இந்த தகுதித் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்வை யு.ஜி.சி.யும் மாநில அளவிலான ஸ்லெட் தகுதித் தேர்வை யு.ஜி.சி. அனுமதித்துள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகமும் நடத்துகின்றன.
ஆண்டுக்கு 2 முறை
ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த கல்லூரியிலும் உதவிப் பேராசிரியர் ஆகலாம். அதேநேரத்தில் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டுமே அந்த தகுதி ஏற்றுக்கொள்ளப்படும்.
முன்பெல்லாம் நெட் தகுதித் தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில், லட்சக்கணக்கான விடைகளை மதிப்பீடு செய்ய வேண்டியதிருந்தால் கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்குறி வகைக்கு (ஆப்ஜெக்டிவ்) மாற்றப்பட்டது. அதன்படி பொதுஅறிவு, குறிப்பிட்ட பாடம் ஆகிய அனைத்திலும் விடைகளை ஓ.எம்.ஆர். ஷீட்டில் மார்க்கிங் செய்யும் முறைதான் நடைமுறையில் இருந்து வருகிறது.
தேர்வுமுறையில் மாற்றம்
உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வோரின் தகுதியை வெறுமனே ஆப்ஜெக்டிவ் முறை தேர்வால் சோதித்தறிய முடியாது என்று யு.ஜி.சி. கருதுகிறது. அதோடு, கேள்விகளின் தரத்தையும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து யு.ஜி.சி. துணைத் தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ் 'தி இந்து' நிருபரிடம் கூறுகையில், "நெட் தகுதித்தேர்வில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளோம். இதற்காக ஓர் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் குழுவின் அறிக்கை வந்ததும் நெட் தேர்வு முறை மாற்றி அமைக்கப்படும்" என்றார். ஏற்கனவே இருந்ததைப் போன்று கேள்விகளுக்கு விரிவாக பதில் அளிக்கும் முறை மீண்டும் கொண்டுவரப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
விரைவில் தேர்வு முடிவு
இந்த ஆண்டுக்கான முதலாவது நெட் தகுதித்தேர்வு, கடந்த ஜூன் மாதம் நடந்தது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலைப் பட்டதாரிகள் தேர்வு எழுதி உள்ளனர். விடைத் தாள்கள் கணினி மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. நெட் தேர்வுக்குழு கூட்டம், சில நாட்களுக்கு முன் நடந்தது. எனவே, தேர்வு முடிவு வெகுவிரைவில் வெளியிடப்படும் என்று யு.ஜி.சி. துணைத்தலைவர் எச்.தேவராஜ் தெரிவித்தார்.
ஜே.ஆர்.எப். தகுதி
நெட் தேர்வு, உதவி பேரா சிரியர் தகுதித்தேர்வாக மட்டு மல்லாமல் ஜே.ஆர்.எப். என்று சொல்லப்படும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்புக்காகவும் (ஆராய்ச்சி படிப்புக்கு வழங்கப்படும் உதவித்தொகை) நடத்தப்படுகிறது. நெட் தேர்வு தகுதித்தேர்வு என்ற போதிலும் குறிப்பிட்ட தேர்ச்சி மதிப்பெண் பெறும் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக யு.ஜி.சி. அறிவித்துவிடுவதில்லை.
அதிக மதிப்பெண் பெறும் ஏறத்தாழ 6 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களில் 1,600 பேர் ஜே.ஆர்.எப். தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment