தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 1 தேர்வர்களுக்கான வயது வரம்பை 45 ஆக அதிகரிக்க வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக குரூப் 1 தேர்வு எழுதும் தேர்வர்களின் கூட்டமைப்பினர் கூறியது:
துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு எழுதுவதற்கு பொதுப்பிரிவினருக்கு 30 வயதும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 35-உம் வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2001 முதல் 2013 வரை 12 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே குரூப் 1 தேர்வுகள் நடைபெற்றுள்ளன. குரூப் 1 தேர்வு அறிவிப்பிலிருந்து பணி நியமனம் வரை 3 ஆண்டுகள் ஆகிறது. இந்தத் தேர்வுக்கு தயாராகும் காலங்கள் போக ஒருமுறை வாய்ப்பை இழந்தால் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க நேருகிறது.
கடந்த ஆட்சியில் நடைபெற்ற குரூப் 1 தேர்வுகளில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றதாகவும் புகார்கள் எழுந்தன. இப்போது தேர்வுகள் நேர்மையாக நடைபெறுவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதும் ஆர்வம் அதிகமாக உள்ளது.
தமிழ் வழியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் 30 வயதையொட்டிதான் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதத் தொடங்குகின்றனர். இரண்டு முறை எழுதிய பிறகுதான் அவர்களுக்கு இந்தத் தேர்வு தொடர்பான ஒரு தெளிவு கிடைக்கிறது. ஆனால், இரண்டு முயற்சிகளுக்கு மேல் அவர்கள் 35 வயதை எட்டிவிடுவதால் தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஆந்திரம், உத்தரப்பிரதேசம், பிகார், குஜராத், ஹரியாணா, மேற்கு வங்கம், அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குரூப் 1 தேர்வு எழுதும் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கான வயதுவரம்பு 45 ஆக உள்ளது.
கல்வியறிவில் முழுமை பெற்ற மாநிலமான கேரளத்தில் கூட உச்சபட்ச வயது வரம்பு 45 ஆக இருக்கிறது. எனவே, தமிழகத்தில் இந்த வயது வரம்பைத் தளர்த்த வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு எந்த ஒரு மாநிலத்திலும் குரூப் 1 தேர்வுகளில் வயது வரம்பு 35 என நிர்ணயிக்கப்படவில்லை. தமிழகத்தில் மட்டுமே அந்தப் பிரிவினருக்கும் 35 வயது வரம்பாக உள்ளது.
தமிழ் வழியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் 30 வயதைக் கடந்த பிறகே குரூப் 1 தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். ஓரிரு முயற்சிகளுக்குப் பிறகு அவர்கள் தேர்வு எழுதும் வயதைக் கடந்து விடுகின்றனர்.
எனவே, தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பல ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை 45 ஆக அதிகரிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment