தொலைதூரக் கல்வியில் முதல்முறையாக எம்.எட். (சிறப்பு கல்வி) படிப்பை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.
தபால்வழியில் பி.எட். படிப்பு
மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், கோவை பாரதியார், தஞ்சை தமிழ், நெல்லை மனோன்மணீயம், சிதம்பரம் அண்ணாமலை, தமிழ்நாடு திறந்தநிலை என குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே தபால்வழியில் பி.எட். படிப்புகளை வழங்குகின்றன. இதேபோல் மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமும் இப்படிப்பை வழங்குகிறது.
மாற்றுத் திறனாளி மாணவர்களின் ஆசிரியர்கள்
அஞ்சல்வழி பி.எட். படிப்பில் யார் வேண்டுமானாலும் சேர்ந்துவிட முடியாது. பட்டப் படிப்புடன் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் கட்டாயம் அவசியம். அதோடு தற்போது ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டும் இருக்க வேண்டும்.
பொது பி.எட். படிப்பைப் போன்று பி.எட். சிறப்பு கல்வி என்ற சிறப்பு பி.எட்.படிப்பும் உள்ளது. பார்வையற்ற, காது கேளாத, மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களை உருவாக்கும் படிப்புதான் பி.எட். சிறப்பு கல்வி படிப்பு.
சிறப்பு எம்.எட். படிப்பு அறிமுகம்
இந்த படிப்பை தமிழக அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி மூலமாக வழங்கி வருகிறது. சிறப்பு கல்வி பி.எட். படிப்பினை பொது பி.எட். படிப்புக்கு இணையான படிப்பாக அங்கீகரித்து உத்தரவும் பிறப்பித்துள்ளது. எனவே, பி.எட். சிறப்பு கல்வி பட்டதாரிகள் சிறப்பு பள்ளிகளில் மட்டுமின்றி அனைத்து அரசு பள்ளிகளிலும். உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேரலாம்.
தற்போது சிறப்பு கல்வி பி.எட். படிப்பில் ஆண்டுதோறும் 500 பேர் நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கப்படுகிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி மூலம் சிறப்பு கல்வியில் எம்.எட். படிப்பை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
100 இடங்கள்
இதற்காக இந்திய மறுவாழ்வு கவுன்சிலுக்கு (ஆர்.சி.ஐ.) விண்ணப்பித்து இருப்பதாகவும் அனுமதி கிடைத்ததும் இந்த படிப்பு தொடங்கப்படும் என்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியை சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார். இந்த படிப்பில் 100 பேர் சேர்க்கப்படுவார்கள். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
ஆசிரியர் பணி வாய்ப்பு
எப்படி சிறப்பு கல்வி பி.எட். பட்டம் பொது பி.எட். படிப்புக்கு இணையானதாக கருதப்பட்டு அரசு வேலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதேபோல் புதிதாக கொண்டு வரப்படும் சிறப்பு கல்வி எம்.எட். பட்டமும் பொது எம்.எட். படிப்புக்கு இணையானதாக அனுமதிக்கப்பட்டு கண்டிப்பாக அரசு பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று பதிவாளர் முருகன் தெரிவித்தார்.
பி.எட். சிறப்பு கல்வி பட்டதாரிகள் சிறப்பு பள்ளிகளில் மட்டுமின்றி அனைத்து அரசு பள்ளிகளிலும். உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேரலாம்.
No comments:
Post a Comment