தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,645 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 3,900 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தாற்காலிக அடிப்படையில் உடனடியாக நிரப்ப முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்திலும், பட்டதாரி
ஆசிரியர்களை ரூ. 4 ஆயிரம் தொகுப்பூதியத்திலும் தாற்காலிகமாக நியமித்துக்கொள்ளவும் அவர் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தப் பணியிடங்களை அந்தந்த பள்ளி அளவிலேயே தலைமையாசிரியர்கள் நிரப்பலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் கூறினார்.
தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், உயிரியல், தாவரவியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் 2,645 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசு, நகராட்சிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் 3,900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியுள்ளது. தேர்வு முடிவுகளை வெளியிடவும், சான்றிதழ்களை சரிபார்க்கவும், பணி நியமனம் செய்யவும் ஓரிரு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்கவும், அரசுப் பள்ளி மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்யவும் இந்த காலிப் பணியிடங்களை பள்ளி அளவில் தாற்காலிகமாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ராமேஸ்வரமுருகன்தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment