ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறச்செய்யும் வகையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின ஆசிரியர்களுக்கு சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் விசேஷ பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு
மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு, தமிழகத்தில் 23.8.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும், சுயநிதி பள்ளிகளிலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்க முடியும். தேர்வில் 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மார்க்) எடுத்தால், தேர்ச்சிபெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
தேர்ச்சி விகிதம் மிகக்குறைவு
அரசு பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் இரண்டுமுறை தகுதித்தேர்வை நடத்தியது. இரண்டிலும், ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பினரின் மிகக்குறைவாக இருந்தது. மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல தமிழகத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதம் அல்லது 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு பயிற்சி
ஆனால், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளதால் தேர்ச்சி மதிப்பெண் ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என்று அரசு உறுதியாக கூறிவிட்டது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான காலி இடங்கள் அப்படியே இருக்கும் என்றும், தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றால் அவர்கள் பணியில் சேர்ந்துகொள்ளலாம் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆதி திராவிடர் வகுப்பினர், பழங்குடியினர், மதம்மாறிய ஆதி திராவிடர்கள் ஆகியோரை தகுதித்தேர்வில் வெற்றிபெறும் வகையில் அவர்களுக்கு சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் விசேஷ பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. எத்தனை ஆசிரியர்களுக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்? பயிற்சி வகுப்புகள் எவ்வளவு காலம்? பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கலாமா? என்பது உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் முடிவு செய்யப்படும். இதற்கான பணிகளை ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மேற்கொண்டு வருகிறது.
1 comment:
only 2 more weeks are there! no announcement yet!
Post a Comment