Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 22 July 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு: 1.67 லட்சம் பேர் போட்டி

டி.ஆர்.பி., நடத்தும், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று (21ம் தேதி) நடக்கிறது. இதில், 1.67 லட்சம் பேர், பங்கேற்கின்றனர். ஒரு பணிக்கு, 58 பேர் வீதம், போட்டி போடுகின்றனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான போட்டித் தேர்வுக்கு, 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், ஆண்கள், 57,136 பேர்; பெண்கள்,1,09,864 பேர்.

மாற்றுத் திறனாளிகள், 8,506 பேரும், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 971 பேர், பார்வையற்றவர். மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை, மூன்று மணி நேரம், தேர்வு நடக்கிறது. 150 மதிப்பெண்களுக்கு, "அப்ஜக்டிவ்" முறையில், தேர்வு நடக்கிறது. தேர்வுப் பணியில், 11,770 பேரை, டி.ஆர்.பி., ஈடுபடுத்தி உள்ளது.

சென்னை மாவட்டத்தில் மட்டும், 13,927 பேர் எழுதுகின்றனர். இவர்களில், ஆண்கள், 3,649 பேர்; பெண்கள், 10,278 பேர்; 543 பேர், மாற்றுத் திறனாளிகள். 55 மையங்களில், தேர்வு நடக்கிறது. பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, கூடுதலாக, அரை மணி நேரம் ஒதுக்கப்படும் எனவும், இவர்களுக்கு,வசதியாக தரைத் தளத்திலேயே, இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

"தேர்வு, ஒளிவு மறைவற்ற முறையில் நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி தெரிவித்துள்ளார். தேர்வர்கள், காலை, 9:30 மணிக்கு, தேர்வு அறையில் அமர வேண்டும் என, டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.

டி.ஆர்.பி., அதிகாரிகள், தேர்வை, தீவிரமாக கண்காணிக்க, முடிவுசெய்துள்ளனர். இதற்காக, பல அதிகாரிகள், மாவட்டங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கோவையில், டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் சவுத்ரி முகாமிட்டுள்ளார். உறுப்பினர் உமா, மதுரை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். உறுப்பினர் - செயலர் அறிவொளி, சென்னையில் இருந்தபடி, மாநிலம் முழுவதும், தேர்வுப் பணிகளை கண்காணிக்கிறார்.

தேர்வு முடிந்ததும், மாவட்ட வாரியாக, விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, சீலிடப்படும். பின்னர், அனைத்து விடைத்தாள்களும், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, "ஸ்கேன்" செய்யப்பட்டு, கம்ப்யூட்டர் மூலமாக மதிப்பீடு செய்து, தேர்வு முடிவு வெளியிடப்படும்.

கம்ப்யூட்டர் மூலமான மதிப்பீடு என்பதால், விடைத்தாள்கள், மிக விரைவாக மதிப்பீடு செய்யப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, ஆகஸ்ட், 15ம் தேதிக்குள், தேர்வு முடிவை எதிர்பார்க்கலாம். 

அதன்பின், தேர்வு பெறுபவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, தேர்வு பெற்றதற்கான உத்தரவை, டி.ஆர்.பி., வழங்கும். ஆகஸ்ட் இறுதிக்குள், 2,881 பேரையும், பணி நியமனம்செய்திட, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 

ஒரு பணியிடத்திற்கு, 58 பேர் வீதம், போட்டி போடுகின்றனர். இதனால், திறமையானவர்கள் மட்டுமே, தேர்வில் வெற்றி பெற முடியும் எனவும், இவர்களால், சிறப்பான கல்வியை வழங்க முடியும் எனவும், டி.ஆர்.பி., நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வடமாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அதிகளவில், முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தேர்வு பெறும் ஆசிரியர்களில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தருமபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்.

No comments: