"ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்வதற்கு, நாளை (27ம் தேதி) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்" என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு: வரும் கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும், நாளை (27ம் தேதி) முதல், விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்.
ஜூன், 12ம் தேதி வரை, தினமும், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், 250 ரூபாயும், இதர பிரிவு மாணவர்கள், 500 ரூபாயும், ரொக்கமாக கொடுத்து, விண்ணப்பங்களை பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, விண்ணப்பங்கள் வாங்கிய இடத்திலேயே, ஜூன், 12ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு குறைந்தபட்சம், 540 மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியர், ஆசிரியர் பயிற்சியில் சேர, விண்ணப்பிக்கலாம்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். மாணவர் சேர்க்கை, "ஆன்-லைன்" வழியில் நடக்கும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலோ அல்லது சி.இ.ஓ., குறிப்பிடும் மையத்திலோ கலந்து கொண்டு, விரும்பிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை தேர்வு செய்யலாம்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர் பயிற்சி படிப்பில்சேர, அதிகபட்ச வயது, 35. ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கு, அதிகபட்ச வயது, 40. இதர பிரிவு மாணவர்கள், 31.7.13 அன்று, 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment