Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 21 April 2013

NATA பி.ஆர்க். நுழைவுத் தேர்வு

பி.ஆர்க். படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அமைப்பு அகில இந்திய அளவில் நடத்தும் நேட்டா (NATA) திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் பிஆர்க் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும் இந்த நேட்டா நுழைவுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம்.

ட்டடங்களையும் இதரக் கட்டுமானங்களையும் வடிவமைப்பது பற்றிய படிப்புதான் ஆர்க்கிடெக்ச்சர்.  கட்டுமான இடத்தில் என்னென்ன புதுமைகளைப் புகுத்த முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு இடம் தேவைப்படும், எவ்வளவு பொருள்கள் தேவைப்படும், கட்டடத்துக்கு எவ்வளவு காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்கும் என்று பல்வேறு விஷயங்களையும் உள்வாங்கி கட்டுமானத்தைத் திட்டமிட வேண்டியது ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர்களின் பொறுப்பு. புராதனக் கட்டடங்களைப் பாதுகாப்பது, கிரீன் பில்டிங் என்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற  கட்டட வடிவமைப்பு, நகரங்களைத் திட்டமிடுதல், திறந்த வெளி வடிவமைப்பு போன்ற பல்வேறு அம்சங்ளும் ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர்களின் பணிகளில் அடங்கும். கலை ரசனை, டிராயிங் திறமை, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றில் திறமையுள்ள மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு பி.ஆர்க். இதன் படிப்புக் காலம் ஐந்து ஆண்டுகள்.

இப்படிப்பில் சேருவதற்கு கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பு அகில இந்திய அளவில் நடத்தும் நேட்டா திறனறித் தேர்வை (NATA) எழுதி இருக்க வேண்டும். இத்தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவான டிராயிங் தேர்வு, காகிதத்தில் விடையளிக்கும் வகையில் இருக்கும். அதையடுத்து நடத்தப்படும் கலை உணர்வு சோதனைத் தேர்வில் (ஏஸ்தெட்டிக் சென்ஸ்டிட்டிவிட்டி டெஸ்ட்) அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஓசூர், காஞ்சிபுரம், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறும். புதுச்சேரியிலும் இத்தேர்வை எழுதலாம். நேட்டா தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். அதாவது 200-க்கு 80 மதிப்பெண்கள் பெற வேண்டும். மாணவர்கள் விரும்பினால், நேட்டா தேர்வை மீண்டும் எழுதலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். எழுதும் தேர்வு மற்றும் அதற்கு முந்தைய தேர்வுகளின் சராசரி மதிப்பெண்கள்தான் மதிப்பெண் சான்றிதழில் கொடுக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, மீண்டும் தேர்வு எழுதுவதை முடிவு செய்ய வேண்டும். இந்தத் திறனறித் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்கவேண்டும். பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்வை எழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ஆயிரம் ரூபாய். ஐசிஐசிஐ வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தையும் தகவல் விவரக் குறிப்பையும் பெறலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தாங்கள் தேர்வு எழுத விரும்பும் தேர்வு மையத்தை அணுக வேண்டும். அங்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் உரிய ஆவணங்களையும் கொடுத்து, தேர்வு எழுதுவதற்குப் பதிவு செய்து, தேர்வுக்கான தேதியை கேட்டுப் பெற வேண்டும். பின்னர் தேர்வு எழுதுவதற்கான அப்பாயின்ட்மெண்ட் வவுச்சரைப் பெற வேண்டும். தேர்வுத் தேதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்குச் சென்று விட வேண்டும். அப்பாயின்மெண்ட் வவுச்சர், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, தேர்வு எழுதுவதற்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களுக்கு பி.ஆர்க். மாணவர்களைச் சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் தனியே கவுன்சலிங் நடத்துகிறது.நேட்டா நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன், பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200-க்கு எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கவுன்சலிங்கிற்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். எனவே, தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்களும் கட்டாயம் இந்த நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். நேட்டா தேர்வுக்கான பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான இறுதித் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நேட்டா தேர்வு இணையதளத்தைப் பார்த்து இத்தேர்வு குறித்த விவரங்களை விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

விவரங்களுக்கு: www.nata.in

No comments: