Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 10 March 2013

NCC மாணவர்களுக்கு என்ன சலுகை?


தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு படிக்கும்போது உதவித்தொகையும் படித்த பிறகு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் அளிக்கப்படுகின்றன.

ராணுவம் மற்றும் காவல்துறையில் சேர விரும்புபவர்கள் கல்லூரிப் படிப்பில் சேர்ந்த முதலாண்டிலேயே என்.சி.சி. பயிற்சியில் சேருவது அதற்கான நல்ல வாய்ப்பாக அமையும்" என்கிறார் செயின்ட் ஜான் கம்பெனி கமாண்டோ கேப்டன் ஆண்ட்ரூஸ். பாளையங்கோட்டை செயின்ட் ஜான் கல்லூரியில் மாநில அளவிலான என்.சி.சி. பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில் மதுரை குரூப் சார்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் உள்ள 16 கல்லூரிகளைச் சேர்ந்த 700 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த முகாமின் ஒருங்கிணைப்பாளர் கேப்டன் ஆண்ட்ரூஸ். காவல்துறை மற்றும் ராணுவத்தில் சேருவதற்கு என்.சி.சி., பயிற்சி எப்படி சிறப்பு நுழைவுச் சீட்டாக இருக்கிறது என்பது பற்றி விளக்கினார்.

கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே என்.சி.சி., பயிற்சியில் சேர்ந்து வாரம் ஒரு முறை என்ற அளவில் ஓராண்டிற்கு பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல உடல் திறனுடன் (இதற்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்) குறைந்தது 168 செ.மீ. உயரம் இருப்பவர்கள் மட்டுமே என்.சி.சி.யில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சிக் காலத்தில் 90 சதவீதம் பயிற்சியை முறையாகப் பெற்றிருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் இதற்குத் தகுதியானவர்கள்.
இப்படி பயிற்சி பெற்றவர்களுக்கு ‘பி’ கிரேடு, ‘சி’ கிரேடு என்ற இரு பிரிவுகளில் தேர்வுப் பயிற்சி நடத்தப்படும். இதில் பி கிரேடு தேர்ச்சி பெற்றவர்கள் காவல் துறை அல்லது ராணுவத்தில் சேர விரும்பினால், இந்தச் சான்றிதழுக்கு கூடுதலாக 10 போனஸ் மதிப்பெண்கள் கிடைக்கும். பட்டப்படிப்பு முடிக்கும் முன்பே பணியில் சேர்ந்தால் காவல் துறையில் கான்ஸ்டபிளாகவும் ராணுவத்தில் சிப்பாயாகவும் சேர முடியும். டிகிரி முடித்த பின் இன்ஸ்பெக்டராகவும், ராணுவத்தில் அதிகாரியாகவும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பயிற்சித் தேர்வின்போது எழுத்துத் தேர்வு, மேப் ரீடிங், டிரில், ரைபிள்களை கழற்றி மாட்டுதல் போன்றவற்றில் தேர்வுகள் நடத்தப்படும். ஏ.கே.47 ரைபிள் என்றால், 50 விநாடிகளிலும் எல்.எம்.ஜி., எனப்படும் லைட் மெட்டல் துப்பாக்கி என்றால், 60 விநாடிகளிலும் கழற்றி மாட்ட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் மதுரை, பாளையங்கோட்டை, விருதுநகர் என்று பல மாவட்டங்களிலும் இந்தப் பயிற்சித் தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் மாதத்தில் ‘சி’ கிரேடு பயிற்சித் தேர்வு நடக்கும். இதில் தேறியவர்களுக்கு  கூடுதலாக 15 போனஸ் மதிப்பெண்கள் கிடைக்கும். அதேபோல பள்ளியில் 8, 9 வகுப்புகளில் என்.சி.சி.யில் சேர்ந்து, பயிற்சி பெற்று ‘ஏ’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு தொழிற்கல்வியில் சேரும்போது சிறப்பு ஒதுக்கீடு உள்ளது" என்று ஆண்ட்ரூஸ் விளக்கினார்.

டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாதெமி, சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெயினிங் அகாதெமி, மகளிருக்கான குறைந்த கால ராணுவ சேவைப் பிரிவு ஆகியவற்றில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. துணை ராணுவப் படைத் தேர்வில் என்.சி.சி. மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. தொலை தொடர்புத்துறை பணிகளிலும் என்.சி.சி. மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. என்.சி.சி.யில் ‘பி’ அல்லது ‘சி’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

சஹாரா உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் என்.சி.சி. மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. என்.சி.சி. இளநிலைப் பிரிவைச் சேர்ந்த 570 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதமும் முதுநிலைப் பிரிவைச் சேர்ந்த 380 பேருக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமும் வழங்கப்படுகின்றன. பொறியியல் மருத்துவம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், ஃபேஷன் டிசைனிங், மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் படிக்கும் தகுதியுடைய 67 என்.சி.சி. மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 80 சதவீத வருகைப் பதிவுடன் இரண்டு ஆண்டுகள் என்.சி.சி.யில் இருந்த மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு மட்டும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இதுபோல, என்.சி.சி. மாணவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளையும் முன்னுரிமையையும் குறித்த விவரங்கள் என்சிசி இணையதளத்தில் உள்ளன. தேசிய மாணவர் படை அதிகாரிகளிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

விவரங்களுக்கு:  www.nccindia.nic.in

No comments: