Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 10 December 2012

பி.எட்., எம்.எட். நுழைவுத் தேர்வு

னைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பள்ளிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. தரமான ஆசிரியர்களை  நியமிப்பதன் மூலம் அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்பதால் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டது. மத்திய செகண்டரி கல்வி போர்டு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவு. தமிழ்நாட்டில் முதன் முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 6.76 லட்சம் பேர் எழுதினாலும்கூட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 2,448 பேர்தான். தேர்வு நேரம் போதவில்லை என்ற குறையை களையும் வகையில் தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி மறு தேர்வு நடத்தப்பட்ட போதிலும்கூட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 2.93 சதவீதம்தான். அதாவது மொத்தத்தில் 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்குக்கூட போதிய தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத நிலைமை உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் கல்விப் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக நீதிபதி ஜே.எஸ். வர்மாவின் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அண்மையில் அறிக்கையைத் தாக்கல் செய்தது. 

“ஆசிரியர் கல்வி தரம் குறைந்து உள்ளது என்பதையும் கல்வியியல் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் போதிய அறிவுத் திறன் கொண்டவர்களாக இல்லை என்பதையும் ஆசிரியர் தகுதித் தேர்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஆசிரியர் கல்விப் படிப்புகளில் தரமான மாணவர்கள் சேர்ந்திருந்தால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் இந்த அளவுக்கு இருந்திருக்காது என்றும் வாதம் செய்யலாம். எனவே, ஆசிரியர் கல்வி படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நுழைவு தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியங்களை அரசு ஆராயலாம்” என்று இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்கு தரமான ஆசிரியர்களின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ‘மாணவர்களுக்கு உண்மையான பாடப்புத்தகம் ஆசிரியர்கள்தான்’ என்று மகாத்மா காந்தி சுட்டிக்காட்டியுள்ளதை நீதிபதி வர்மா தனது அறிக்கையில் நினைவுகூர்ந்துள்ளார். அத்துடன், பாடத்திட்டத்தின் தரம், ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம்...இப்படி பல்வேறு யோசனைகளை இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், முதல் கல்வியியல் படிப்பு அது டிப்ளமோவாக இருந்தாலும் சரி, பட்டப் படிப்பாக இருந்தாலும் சரி அது நேரடி வகுப்பறைப் படிப்பாக இருப்பது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்தக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 அண்மையில் கூடிய மத்திய கல்வி ஆலோசனை வாரியம் இந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பிஎட், எம்எட் உள்ளிட்ட ஆசிரியர் கல்வி பயிற்சிப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையைச் செயல்படுத்துவது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகமோ தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலிலோ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் 700க்கு மேல் உள்ளன. இதேபோல 300க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதில்லை. இங்கு மாணவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.  இந்த நிலையில், ஆசிரியர் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற மத்திய அரசின் முடிவு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு இதுவரை தெளிவாக்கப்படவில்லை. அதாவது, வரும் கல்வியாண்டில் ஆசிரியர் கல்வி படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு இருக்குமா இருக்காதா என்பதை தமிழக அரசு விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆசிரியர் கல்விப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ள அளவுக்கு ஆசிரியர்களின் தரம் உயரவில்லை என்பதே பொதுவான கருத்து. அதனால்தான், ஆசிரியர் கல்வி படிப்புகளைப் படித்திருந்தாலும்கூட, ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியர் பணிக்கு வர விரும்பும் மாணவர்கள் தரமானவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


“ஒரு காலத்தில் மாநில அரசின் பட்டியலிலிருந்த கல்வி, தற்போது மத்திய மாநில அரசுகளுக்கும் பொதுவாக பொதுப் பட்டியலில் இருக்கிறது. இத் துறையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதிதான் இதுபோன்ற நுழைவுத் தேர்வும். அந்தந்த மாநிலங்களின் சூழ்நிலைக்கேற்ற வகையில் நடைமுறைகளைப் பின்பற்ற அனுமதிக்க வேண்டும். எந்த ஒரு புதிய விதிமுறையையோ அல்லது நடைமுறையையோ கொண்டு வருவதற்கு முன்னதாக, கிராமப்புற ஏழைக் குழந்தைகளுக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில் அது இருக்குமா என்று பார்க்க வேண்டும். படிப்புக்கு முன் நுழைவுத் தேர்வையும் படிப்புக்குப் பிறகு தகுதித் தேர்வையும் நடத்துவதால் மட்டுமே ஆசிரியர்களின் தரத்தை மதிப்பிட்டு விட முடியாது” என்று சில கல்வியாளர்கள் கருதுகிறார்கள். அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட முன்மாதிரியான ஆசிரியர்கள் தங்களது உழைப்பால் மாணவர்களை படிப்பில் கைதூக்கி விட்டுள்ளனர். அதுபோன்ற பெருமை சேர்க்கும் ஆசிரியர்களை உருவாக்க இந்த நுழைவுத் தேர்வு உதவுமா என்று தெரியவில்லை.


No comments: